சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள கல்வெட்டுகளை (Chidambaram Temple Inscriptions) முழுமையாக படியெடுப்பதில் மத்திய அரசு ஆர்வம் காட்டாத நிலையில் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்பி வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்ற மக்களவையில் சிதம்பரம் கோவில் கல்வெட்டுகள் தொடர்பாக ரவிக்குமார் எம்பி எழுப்பிய கேள்விகள்:

அ) சிதம்பரம் நடராஜர் கோயிலில் சோழர் காலத்தைச் சேர்ந்த ஏராளமான கல்வெட்டுகள் உள்ளன என்பது அரசுக்குத் தெரியுமா? கி.பி 10 ஆம் நூற்றாண்டில் முதலாம் ஆதித்ய சோழனின் ஆட்சிக் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுகள் முதல் ஏராளமான கல்வெட்டுகள் அங்கு உள்ளன, அவை கோயிலின் வரலாறு, அந்தக் கோயிலுக்கு அளிக்கப்பட்ட ஆதரவு ஆகியவை பற்றிய மதிப்புமிக்க நுட்பமான விவரங்களை வழங்குகின்றன. அரசுக்கு அது தெரியுமெனில் அதன் விவரங்களைத் தருக;

(ஆ) இந்தக் கல்வெட்டுகளைத் தொகுக்கவும், ஆவணப்படுத்தவும், , புத்தக வடிவில் வெளியிடவும் அரசுக்கு ஏதேனும் திட்டம் உள்ளதா, அப்படியானால், அதன் விவரங்களைத் தருக;
(இ) நடராஜர் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு இலவசமாகவோ அல்லது மானிய விலையிலோ அந்தக் கல்வெட்டுகள் அடங்கிய நூலை வழங்க அரசு திட்டமிட்டுள்ளதா?, அப்படியானால், அதன் விவரங்களைத் தருக;
(ஈ) இல்லையென்றால், கல்வெட்டுகளின் வரலாற்று , கலாச்சார முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, அவற்றைப் பாதுகாத்து, நூலாக வெளியிட்டு, விநியோகிக்கும் திட்டத்தைத் தொடங்க அரசாங்கம் பரிசீலிக்க வாய்ப்புள்ளதா? என்பதை அறியத் தருக

மக்களவையில் ரவிக்குமார் எம்பியின் கேள்விகளுக்கு மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்:
இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் (ASI) கல்வெட்டுப் பிரிவு, சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோயிலிலிருந்து 297 கல்வெட்டுகளைப் பிரதி எடுத்துள்ளது, இந்தக் கல்வெட்டுகள் முதலாம் ராஜேந்திர சோழன் ( 1036 CE) ஆட்சிக் காலம் முதல் பல்வேறு காலங்களைச் சேர்ந்தவை.
இந்தக் கல்வெட்டுகள் அனைத்தும் படியெடுக்கப்பட்டு, அவற்றின் சாராம்சம் 1888 முதல் 1963 வரையிலான இந்திய கல்வெட்டு ஆண்டு அறிக்கைகளில் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றில் 157 கல்வெட்டுகளின் முழுமையான பாடங்கள் தென்னிந்திய கல்வெட்டுத் தொகுதிகளில் வெளியிடப்பட்டுள்ளன.
மேற்கண்ட அனைத்து ASI வெளியீடுகளும் ASI அலுவலகங்கள், பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் கல்வெட்டுப் பிரிவு ஆகியவற்றில் உள்ள வெவ்வேறு விற்பனை கவுண்டர்களில் கிடைக்கின்றன.

ஆர்வமில்லாத மத்திய அரசு
மத்திய அமைச்சரின் பதில் குறித்து ரவிக்குமார் எம்பி தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: சிதம்பரம் நடராஜர் கோயில் கல்வெட்டுகள் இன்னும்கூட முழுமையாகப் படியெடுக்கப்படவில்லை. படியெடுக்கப்பட்டவையும்கூட முழுமையாகப் பிரசுரிக்கப்படவில்லை. சோழர், பாண்டியர், விஜயநகர ஆட்சிக்காலம் என நீண்ட வரலாற்றைப் பதிவு செய்திருக்கும் கல்வெட்டுகள் அங்கு உள்ளன. தமிழ்க் கல்வெட்டுகள் மட்டுமின்றி சமஸ்கிருத கல்வெட்டுகளும் உள்ளன.
நடராஜர் கோயில் வரலாற்றையும் கடந்த ஆயிரம் ஆண்டுகால தமிழ்நாட்டின் வரலாற்றையும் புரிந்துகொள்ள இந்தக் கல்வெட்டுகள் இன்றியமையாதவையாகும். ஒன்றிய கலாச்சார அமைச்சரின் பதிலைப் பார்க்கும்போது ஒன்றிய அரசு இந்தப் பணியை முன்னெடுக்கத் தயாராக இல்லை எனப் புரிகிறது. எனவே, தமிழ்நாடு அரசின் கல்வெட்டியல் துறை சார்பில் இந்தப் பணியை மேற்கொள்ள வேண்டும் என மாண்புமிகு அமைச்சர் தங்கம் தென்னரசு
அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு ரவிக்குமார் எம்பி தெரிவித்துள்ளார்.