சேரனின் ஆட்டோகிராப் ரீ- ரிலீசும் சொந்தக் காசில் சூனியமும்

Published On:

| By Kavi

சேரன் கதையின் நாயகனாக நடித்து, தயாரித்து, இயக்கிய ‘ஆட்டோகிராப்’ திரைப்படம் நவீன தொழில்நுட்பத்துடன் புதுப்பிக்கப்பட்டு திரையரங்கில் வெளியாக இருக்கிறது. இதை ஒட்டி நடந்த விளம்பர நிகழ்ச்சிக்கு அந்தப் படத்தில் பணியாற்றிய உதவி இயக்குனர்களை எல்லாம் பேச அழைத்திருந்தார் சேரன்.

உமாபதி பேசும்போது , ” சேரன் சார் கிட்ட அசிஸ்டன்ட் டைரக்டர் ஆகறதுகுள்ள, முயற்சி பண்ணா டைரக்டா டைரக்டராவே ஆயிடலாம் . வாய்ப்புக் கேட்டு வருபவர்களை ஒரு நாள் முழுக்க காக்க வைப்பார் . காலையில் உட்கார்ந்த சேரிலேயே இரவு முழுதும் உட்கார்ந்து இருக்க வேண்டும் . எந்தச் சேரில் உட்காந்து இருக்கோம்னு செக் பண்ணுவார் . சேர் மாறி உட்காந்த அவ்வளவுதான் .

ADVERTISEMENT

எனக்கு நடிக்க எல்லாம் விருப்பமில்லை. இவர்தான் நடிக்க வைத்தார். ஒரு காட்சியில் பசியாக இருப்பது தெரிவதற்காக காலையில் இருந்து சாப்பிடாமல் இருக்கச் சொன்னார் . நானும் பயங்கர பசியில் இருந்தேன்.அப்புறம் பிரட்டில் ஜாமுக்கு பதில் ஊறுகாய் இருந்தது . அதைத்தான் சாப்பிட்டு நடித்தேன்.

அதன் பிறகு என்னை வெறுப்பேற்ற வாடா சிவாஜி என்பார் .என்னை வெறுப்பேத்த என்ன வேண்ணாலும் செய்வார்.அப்புறம் ஒரு சீன எடுக்கும்போது , ‘உன்னை எல்லாம் வச்சு வேற எவனும் படம் எடுக்க மாட்டான்;நான்தான் எடுக்கிறேன்’ என்பார் ” என்று சொல்லி தொடர்ந்து ‘பல டார்ச்சர்கள் செய்தார் ” என்று முடித்தார்

ADVERTISEMENT

ராம கிருஷ்ணன் , ” ஆட்டோகிராப் படம் முடிஞ்சதும் எனக்கு பைக்கும் செயினும் வாங்கித் தர்றேன்னு சொன்னார் . படம் வந்து இத்தனை வருஷமாச்சு. இன்னும் வாங்கித் தரல “என்றார்.

ஆட்டோகிராப் படத்தில் உதவி இயக்குனராகப் பணியாற்றிய இயக்குனர் பாண்டிராஜ், “இந்தக் கதை நடிகர் விஜய்க்கு சென்றது. அதன் பிறகு நடிகர் பிரபு தேவாவிடம் சென்றது. அதன் பிறகு அரவிந்த்சாமியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. நடிகர் ஸ்ரீகாந்திடமும் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

ADVERTISEMENT

ஒரு நிலையில் சேரனே ஹீரோவாக நடிக்கப் போகிறார் என்று தெரிந்ததும் நானும், சிம்பு தேவனும் தான் எதிர்ப்பு தெரிவித்தோம். அவர் தோற்கக் கூடாது என்ற அக்கறையில்தான் சொன்னோம் . ஆனால் படம் வெற்றி பெற்ற பிறகு நாங்கள் வேண்டாம் என்று சொன்னதன் கோபம் அவரிடம் ரொம்ப நாள் இருந்தது.. ” என்று அவர் பங்குக்கு பேசினார்.

ஜெகன் தன் பேச்சில், ” ஆட்டோ கிராப் படத்தின் நீளத்தைக் குறைக்க முடியாதுன்னு எங்க டைரக்டர் சேரன் உறுதியா இருந்தாரு . ஆனால் அது படத்தின் வெற்றியைப் பாதிக்கும் என்பதால் அவருக்குத் தெரியாமலே பல காட்சிகளை நான் குறைத்தேன் ” என்று சொன்னபோது , இத்தனை வருடம் கழித்து தான் இயக்கிய படத்தைப் பற்றி தனக்கே தெரியாத ரகசியங்கள் வருவதைக் கண்டு அதிர்ந்து போனார் சேரன்

பைக் விசயத்துக்கு மட்டும் பதில் சொல்லும் விதமாக, “இருந்தப்ப கொடுத்தேன் . இல்லாதப்ப கொடுக்க முடியல. என்ன பண்ண முடியும் ?” என்றார்.

”சந்தோஷத்தைப் பகிர்ந்துக்க சந்தணம் கொடுத்து கூப்பிட்டா , வந்தவன் வெத்தலைய போட்டு மூஞ்சுல துப்பின கதையா ஆயிருச்சே ..” என்று நினைத்திருப்பார் .

நவம்பர் 14 ஆம் தேதி ரீ ரிலீஸ் ஆகிறது ஆட்டோகிராப் .

படம் பாத்துட்டு இந்த முன்னாள் அசிஸ்டன்ட்டுகள் என்ன ஸ்டன்ட்டுகள் அடிக்கப் போறாங்களோ …?

  • ராஜ திருமகன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share