உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது நேற்று காலணி வீசப்பட்ட நிலையில், இன்று (அக்டோபர் 7) நெல்லையில் நீதிபதியை நோக்கி காலணி வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் அமர்வு முன்பு நேற்று காலை விசாரணை நடந்து கொண்டிருந்தது. அப்போது ராகேஷ் கிஷோர் என்ற 71 வயது வழக்கறிஞர் தனது காலணியை கழற்றி நீதிபதி கவாய் மீது வீசியெறிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்திற்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் நாட்டின் பல பகுதிகளிலும் காலணியை வீசிய வழக்கறிஞர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டம் நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில் தமிழ்நாட்டிலும் நீதிமன்றத்தில் நீதிபதியை நோக்கி காலணி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சேரன்மகாதேவி மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி அருண்குமரன் முன்பு கோயில் உண்டியல் திருட்டு வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தர்மேந்திர சிங் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது வழக்கு விசாரணையை நீதிபதி வேறு தேதிக்கு மாற்றி உத்தரவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த தர்மேந்திர சிங் நீதிபதியை நோக்கி தனது காலணியை வீசியுள்ளார்.
இந்த சம்பவம் நீதிமன்றத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தர்மேந்திர சிங்கை பிடித்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கெனவே உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீது வழக்கறிஞர் காலணி வீசிய சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது நெல்லையில் நடந்துள்ள இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.