சென்னையில் மாணவர் நிதின்சாய் கார் ஏற்றி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட சந்துரு உள்ளிட்ட 3 பேரை 14 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
காதல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் கல்லூரி மாணவர் நிதின்சாய், சென்னை திருமங்கலம் பகுதியில் கார் ஏற்றி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக சந்துரு, ஆரோன், யஷ்வந்த் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை கேகே நகரைச் சேர்ந்த சென்னை மாநகராட்சி கவுன்சிலரும் திமுகவின் தலைமை செயற்குழு உறுப்பினருமான கே.கே.நகர் தனசேகரனின் மகள்வழி பேரன்தான் சந்துரு. நிதின்சாய் கொல்லப்பட்ட நிலையில் தலைமறைவான சந்துரு, போலீசில் சரணடைய வைக்கப்பட்டார்.
சந்துரு, அவரது நண்பர்கள் ஆரோன் மற்றும் யஷ்வந்த் ஆகிய 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதனையடுத்து 3 பேரையும் 14 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.