தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில், சென்னையிலும் நல்ல மழை பெய்து வருகிறது. பொதுவாக மழை காலம் என்றாலே பள்ளி கல்லூரி மாணவர்கள் விடுமுறையை எதிர்பார்ப்பதும், வேலைக்கு செல்வோர் வீட்டிலிருந்து வேலை செய்ய எதிர்பார்ப்பதும் வழக்கம்.
அந்தவகையில் சென்னை பள்ளி மாணவர்களுக்கான சூப்பர் நியூஸை கொடுத்துள்ளார் வெதர்மேன் பிரதீப் ஜான்.
இன்று வெளியிட்ட பதிவில், “சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களை நோக்கி மேகங்கள் நகர்ந்து வருகின்றன. குறிப்பாக சென்னையில் நல்ல மழைக்கு வாய்ப்பிருக்கிறது. வட சென்னை மற்றும் மத்திய சென்னையில் இருக்கும் மக்கள் சற்று கவனமாக இருப்பது நல்லது.
பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் மழை இருக்காது. மக்களை மகிழ்விக்கும் வகையில் இருக்கும். மேலும் சென்னைக்கு கனமழைக்கான நேரம் வரும். அடுத்த சக்கரம் உருவாகும் போது பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி அடைய வாய்ப்புள்ளது” என்று கூறியுள்ளார்.
அடுத்த காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 22ம் தேதி வாக்கில் உருவாகவுள்ளது. அப்போது கனமழைக்கு வாய்ப்பிருப்பதால், பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படலாம் என்பதை இவ்வாறு கூறியுள்ளார் பிரதீப் ஜான்.
மேலும் அவர், “குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி நகர்வதால், ஈரப்பதம் உள்ளே தள்ளப்படுவதால் உள் மாவட்டங்களிலும் மழை பெய்யும். தென் தமிழக மாவட்டங்களான தூத்துக்குடி, தென்காசி, விருதுங்கர், தேனி, கன்னியாகுமரி மற்றும் நெல்லை ஆகிய பகுதிகளிலும் கனமழை பெய்யும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
