தமிழக வெற்றிக் கழகம் சிவப்பு, மஞ்சள் மற்றும் சிவப்பு நிற கொடியை பயன்படுத்த தடையில்லை என்று கூறி, அதற்கு எதிராக தொடரப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று (ஆகஸ்ட் 18) உத்தரவிட்டது.
தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபையின் நிறுவன தலைவர் பச்சையப்பன், சென்னை உயர் நீதிமன்றத்தில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடிக்கு எதிராக மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், ‘தங்கள் வணிக சின்னமாக பதிவு செய்யப்பட்டுள்ள சிவப்பு, மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்திலான கொடியை தமிழக வெற்றிக் கழகம் பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட வேண்டும்’ என கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த வழக்கு தனிநீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு முன்பு விசாரணை நடைபெற்று வந்தது.
அப்போது வணிக சின்னமாக பதியப்பட்ட தங்கள் சபை கொடியை பயன்படுத்துவது வணிக சின்ன சட்டத்தையும், பதிப்புரிமை சட்டத்தையும் மீறிய செயலாகும் என்று மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரமேஷ் கணபதி வாதிட்டார்.
அத்துடன், ”அறக்கட்டளையின் அடையாளத்தைச் சுற்றி உருவாக்கப்பட்ட நல்லெண்ணம் மற்றும் நற்பெயரை ஏமாற்றுவதற்காக தங்களது கொடியை தீய நோக்கத்துடன் நகலெடுத்துள்ளனர். அறக்கட்டளை மற்றும் தவெக இரண்டும் சமூக சேவைகளைச் செய்வதால், கொடி ஒற்றுமையின் காரணமாக மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படும். எனவே சிவப்பு மஞ்சள் சிவப்பு நிறத்தில் கொடியை பயன்படுத்த தவெகவுக்கு தடை விதிக்க வேண்டும். மேலும் ஐபி மீறல் மற்றும் மோசடிக்கு ₹5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்” என தர்ம பரிபாலன சபை தரப்பில் வாதிடப்பட்டது.
அதற்கு தமிழக வெற்றிக்கழகம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், ”அறக்கட்டளையும் அரசியல் கட்சியும் ஒரே மாதிரியான துறைகளில் செயல்படவில்லை. தவெக எந்த வர்த்தகத்திலும் ஈடுபடவில்லை. எனவே கொடி மீது உரிமை கோர முடியாது. மனுதாரர் கொடியை ஒப்பிடும்போது தவெக கொடி முற்றிலும் வேறுபாடானது” என்று வாதிட்டார்.
மேலும் இரு கொடிகளில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் குறித்து வாதிட்ட அவர், ”தவெக கொடியால் எப்படி, எந்த வகையில் இழப்பு ஏற்பட்டது? என்பதை மனுதாரர் விளக்கவில்லை என்பதால் தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று கோரினார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ”இரு கொடிகளை ஒப்பிடும்போது தவெகவின் கொடி மனுதாரர் சபை கொடியின் நகல் என கூற முடியாது. எனவே, பதிப்புரிமை மீறல் தொடர்பாக நிவாரணம் கோரும் கோரிக்கையை நான் நிராகரிக்கிறேன். கொடியில் உள்ள வண்ணங்களுக்கு தனி (வர்த்தக முத்திரை) பதிவு மனுதாரரிடம் இல்லை. தவெக கொடியைப் பயன்படுத்துவது பொதுமக்களிடையே ஏமாற்றத்தையோ அல்லது குழப்பத்தையோ ஏற்படுத்தும் என்று கூற முடியாது. எனவே சிவப்பு மஞ்சள் சிவப்பு நிறத்தில் கொடியை பயன்படுத்த தவெகவுக்கு தடை விதிக்க இயலாது” என்று தெரிவித்து, இடைக்கால தடை கோரிய தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபையின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மேலும் இது இடைக்கால உத்தரவு மட்டுமே என்றும், இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை. வழக்கு அடுத்த செப்டம்பரில் விசாரிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.