பாமக சின்னம் தொடர்பான வழக்கு : அன்புமணி பதிலளிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு

Published On:

| By Pandeeswari Gurusamy

பாமகவின் பெயர், கொடி மற்றும் சின்னத்தை பயன்படுத்த அன்புமணி ராமதாஸ் தரப்பினருக்கு தடை விதிக்கக் கோரி மருத்துவர் ராமதாஸ் தாக்கல் செய்த மனு குறித்து, அன்புமணி ராமதாஸ் மற்றும் இந்திய தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக பாமகவில் ராமதாஸ் மற்றும் மகன் அன்புமணி ராமதாஸ் ஆகியோரிடையே கடுமையான கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன. இதனால் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இரு அணிகளாகப் பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

இந்தச் சூழலில், பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) பெயர், கொடி மற்றும் சின்னம் ஆகியவற்றை அன்புமணி ராமதாஸ் தரப்பினர் பயன்படுத்தத் தடை விதிக்கக் கோரி, மருத்துவர் ராமதாஸ் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், கட்சியின் அடிப்படை விதிகளுக்குப் புறம்பாகச் செயல்படுவதால், கட்சி அடையாளங்களைப் பயன்படுத்த அவர்களுக்கு உரிமை இல்லை எனக் குறிப்பிட்டிருந்தார்.

ADVERTISEMENT

இந்த மனு இன்று (பிப்ரவரி 25) சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் நீதிபதி எம். தர்மபிரபு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி, ராமதாஸ் தாக்கல் செய்த மனு குறித்து மருத்துவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் இந்திய தேர்தல் ஆணையம் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

ADVERTISEMENT

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் மார்ச் 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share