சென்சார் சான்றிதழ் வழங்கும் முறையில் மாற்றம், வெளிப்படைத்தன்மை தேவை என்று நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் எம்.பி. கூறியுள்ளார்.
ஜனநாயகன் படத்துக்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்கவில்லை. இதனால் ஜனவரி 9ஆம் தேதி வெளியாக வேண்டிய படம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இன்று வெளியாகியுள்ள பராசக்தி திரைப்படத்துக்கும் தாமதமாகத்தான் தணிக்கை சான்றிதழ் கிடைத்தது.
இந்தசூழலில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கமல்ஹாசன் தணிக்கை சான்றிதழ் வழங்குவது தொடர்பாக இன்று (ஜனவரி 10) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “இந்திய அரசியலமைப்புச் சட்டம் கருத்துச் சுதந்திரத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது.இது பகுத்தறிவால் வழிநடத்தப்பட வேண்டும். ஒருபோதும் வெளிப்படைத்தன்மையற்ற சூழலால் முடக்கப்படக்கூடாது.
இந்த தருணம், ஏதோ ஒரு தனிப்பட்ட திரைப்படத்தைப் பற்றியது மட்டுமல்ல. திரைப்படம் என்பது ஒரு தனிநபரின் உழைப்பு மட்டுமல்ல; அது எழுத்தாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், கலைஞர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் சிறு வணிகர்கள் என ஒரு பெரும் கூட்டமைப்பின் கூட்டு முயற்சி.
இவர்கள் அனைவரின் வாழ்வாதாரம் நியாயமான மற்றும் சரியான நேரத்தில் நடைபெறும் ஒரு செயல்முறையையே சார்ந்துள்ளது.
தெளிவற்ற நிலை நிலவும்போது, படைப்பாற்றல் முடக்கப்படுகிறது, பொருளாதார நடவடிக்கைகள் பாதிக்கப்படுகின்றன, மேலும் பொதுமக்களின் நம்பிக்கை பலவீனமடைகிறது. தமிழ்நாடு மற்றும் இந்திய சினிமா ரசிகர்கள் கலைகளின் மீது மிகுந்த பற்றும், பகுத்தறிவும், முதிர்ச்சியும் கொண்டவர்கள். அவர்கள் வெளிப்படைத்தன்மையையும் மரியாதையையும் பெற தகுதியானவர்கள்.
தற்போது , சான்றிதழ் வழங்கும் முறைகளில் ஒரு கொள்கை ரீதியான மறுபரிசீலனை தேவைப்படுகிறது.
சான்றிதழ் வழங்குவதற்கு வரையறுக்கப்பட்ட காலக்கெடு, வெளிப்படையான மதிப்பீடு மற்றும் நீக்குவதற்காகவோ, மாற்றப்படுவதற்காகவோ பரிந்துரைக்கப்படும் காட்சிகள், ஆகியவற்றுக்கு எழுத்துப்பூர்வமான, நியாயமான விளக்கங்கள் அளிக்கப்பட வேண்டும்.
முழுத் திரையுலகமும் ஒன்றிணைந்து நமது அரசு நிறுவனங்களுடன் அர்த்தமுள்ள, ஆக்கபூர்வமான உரையாடலில் ஈடுபட வேண்டிய தருணம் இது. இத்தகைய சீர்திருத்தம் படைப்புச் சுதந்திரத்தைப் பாதுகாக்கும்” என்று கூறியுள்ளார்.
