தமிழகத்தில் உள்ள 18 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஒரிசா கடலோரப்பகுதிக்கு அப்பால் வட மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் கோவை, நீலகிரி உள்ளிட்ட ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது. இந்நிலையில் தமிழகத்தில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சுமார் 7 முதல் 11 செ.மீ கன மழைக்கு வாய்ப்பு இருப்பதால் இன்றும், நாளையும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்படுள்ளது.
இந்நிலையில் இன்று அதிகாலை முதல் கோவை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. காந்திபுரம், ரயில் நிலையம், டவுன்ஹால், உக்கடம், சிங்காநல்லூர் பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. கோவையின் புறநகர் பகுதிகளான மேட்டுப்பாளையம் சிறுமுகை, பேரூர், தொண்டாமுத்தூர் பகுதிகளிலும் மிதமான மழை பெய்து வருகிறது.
கோவை குற்றால அருவியில் மழை காரணமாக வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில், ஊட்டி கோத்தகிரி, குன்னூர், கூடலூர், பந்தலூர் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், தமிழகத்தில் உள்ள 18 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளது என கூறப்பட்டுள்ளது. திண்டுக்கல், கன்னியாகுமரி, மதுரை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருச்சி, திருநெல்வேலி, திருப்பூர், விருதுநகர், கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்புகள் உள்ளன. இதேபோல திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, பெரம்பலூர், தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நீலகிரிக்கு ஆரஞ்சு அலார்ட்
நீலகிரி மாவட்டத்தில் இன்று ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் கோவை, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்பதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.