வயதான பெற்றோரை கவனிப்பது உள்ளிட்ட காரணங்களுக்காக மத்திய அரசு ஊழியர்கள் 30 நாட்கள் வரை விடுப்பு எடுக்கலாம் என மத்திய பணியாளர் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் வியாழனன்று மாநிலங்களவையில் தெரிவித்தார்.
மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் வயதான பெற்றோரை கவனித்துக் கொள்வதற்காக விடுப்பு எடுக்க ஏதேனும் விதிமுறைகள் உள்ளதா என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலாக அமைச்சர் ஜிதேந்திரசிங் “மத்திய குடிமைப்பணிகள் விதிகள், 1972ன் கீழ் மத்திய அரசு ஊழியர்கள் ஒரு ஆண்டுக்கு 30 நாட்கள்வரை சம்பளத்துடன் கூடிய விடுப்பு எடுத்து கொள்ளலாம். 20 நாட்கள் பாதி சம்பள விடுப்பு எடுக்கலாம். 8 நாட்கள் சாதாரண விடுப்பும் 2 நாட்கள் வரையறுக்கப்பட்ட விடுப்பும் எடுக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.
ஊழியர்கள் வயது முதிர்ந்த பெற்றோரை கவனித்துக் கொள்வது உள்ளிட்ட காரணங்களுக்காக 30 நாட்கள் வரை விடுப்பு எடுக்க முடியும் என்ற அறிவிப்பு மத்திய அரசு ஊழியர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.