பொதுமக்களின் வசதிக்காகவும், குறைந்த கட்டணத்தில் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யவும் பொது மற்றும் ஏசி இல்லாத ரயில் பெட்டிகளின் உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, 2025-26 நிதியாண்டில் 4,838 பெட்டிகளையும், அடுத்த நிதியாண்டில் 4,802 பெட்டிகளையும் தயாரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. மேலும், டிக்கெட் முன்பதிவில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க ஆதார் சரிபார்ப்பு முறையை வலுப்படுத்தியுள்ளது.
மேலும், முறைகேடாக செயல்பட்ட சுமார் 5.73 கோடி IRCTC கணக்குகளை இந்திய ரயில்வே முடக்கியுள்ளது. பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீட்டை மூன்று மடங்கு அதிகரித்து, ரயில் விபத்துகளின் எண்ணிக்கையை குறைத்துள்ளது. அமிர்த் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களின் எண்ணிக்கையை 30 ஆக உயர்த்தி, பிராந்திய இணைப்பை வலுப்படுத்த நமோ பாரத் விரைவு ரயில் சேவைகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இவ்வாறாக, ரயில்வே அமைச்சகம் தனது சேவைகளை நவீனப்படுத்தி வருகிறது.
மக்களின் பயணத் தேவைகளைப் பூர்த்தி செய்வதே மத்திய அரசின் முக்கிய நோக்கம் ஆகும். இதற்காக, பொதுமக்களின் வசதிக்காக நவீன வசதிகளுடன் கூடிய பொது மற்றும் ஏசி இல்லாத பெட்டிகளின் உற்பத்தியில் ரயில்வே சாதனை படைத்துள்ளது. நடப்பு நிதியாண்டான 2025-26 இல், 4,838 புதிய எல்.எச்.பி (LHB) பொது மற்றும் ஏசி இல்லாத பெட்டிகளைத் தயாரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அடுத்த நிதியாண்டான 2026-27 இல், 4,802 நவீன பெட்டிகளைத் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பண்டிகைக் காலங்களில் ஏற்படும் கூட்ட நெரிசலைச் சமாளிக்க, 2025-ஆம் ஆண்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 43,000க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில் பயணங்கள் இயக்கப்பட்டன. மகா கும்பமேளா, கோடைகாலம் மற்றும் சத் பூஜை போன்ற முக்கிய நிகழ்வுகளின் போது அதிகப்படியான ரயில்கள் இயக்கப்பட்டன. மேலும், புது தில்லி ரயில் நிலையத்தைப் போலவே நாடு முழுவதும் 76 முக்கிய ரயில் நிலையங்களில் பயணிகள் தங்குவதற்கான பகுதிகள் உருவாக்கப்படவுள்ளன.
டிக்கெட் முன்பதிவில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக, மத்திய அரசு ‘ஆதார் சரிபார்ப்பு’ முறையை வலுப்படுத்தியுள்ளது. இதன் மூலம், ஆதார் சரிபார்ப்பு செய்த பயனர்கள் மட்டுமே தற்போது ‘தட்கல்’ டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும். இந்த நடவடிக்கையால், முறைகேடாகச் செயல்பட்ட சுமார் 5.73 கோடி சந்தேகத்திற்குரிய IRCTC கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
ரயில் பாதுகாப்பிற்கான நிதி ஒதுக்கீடு கடந்த 10 ஆண்டுகளில் மூன்று மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் இது ரூ. 1,16,470 கோடியாக உள்ளது. இதன் விளைவாக ரயில் விபத்துகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளது. மேலும், குறைந்த கட்டணத்தில் உயர்தர வசதிகளை வழங்கும் அமிர்த் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பிராந்திய இணைப்பை வலுப்படுத்தும் வகையில், புஜ்-அகமதாபாத் மற்றும் ஜெயநகர்-பாட்னா இடையே நமோ பாரத் விரைவு ரயில் சேவைகளும் தற்போது செயல்பாட்டில் உள்ளன.
