சென்சார் சர்ட்டிபிகேட்.. மக்களவையில் திமுக காங்கிரஸ் கேள்வி.. அமைச்சர் எல்.முருகன் சொன்ன பதில் என்ன?

Published On:

| By Mathi

L Murugan

திரைப்படங்களுக்கு 18 நாட்களில் தணிக்கை சான்றிதழ் வழங்கப்படும் என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் திமுகவின் டிஆர் பாலு, காங்கிரஸின் மணிஷ் திவாரி ஆகியோர் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் அளித்த பதில்: மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சத்தின் கீழ், செயல்படும் சட்டப்பூர்வ அமைப்பான மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் திரைப்பட சட்டம் 1952, திரைப்பட தணிக்கை விதிகள் 2024 மற்றும் தொடர்புடைய வழிகாட்டுதலின் கீழ், மக்களுக்கு காட்சிப்படுத்துவதற்காக திரைப்படங்களை தணிக்கை செய்கிறது.

ADVERTISEMENT

இந்திய இறையாண்மை மற்றும் ஒற்றுமை, பாதுகாப்பு, பொது ஒழுங்கு, நாகரீகம், ஒழுக்கம் போன்ற சட்டப்பூர்வ அம்சங்களை மீறும் வகையிலோ, அவதூறு, நீதிமன்ற அவமதிப்பு அல்லது குற்றத்தைத் தூண்டுதல் போன்றவை இடம் பெற்றாலோ மட்டுமே காட்சிகளை நீக்குவதற்கு அல்லது மாற்றியமைப்பதற்கு பரிந்துரைக்கப்படுகிறது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் (2020-21 முதல் 2024-25 வரை) 71,963 திரைப்படங்கள் தணிக்கை செய்யப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தின் உத்தரவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய திரைப்பட சட்டம் வகை செய்கிறது. இது போன்ற சூழல்களில் நீதிமன்ற உத்தரவுகள் செயல்படுத்தப்படுகின்றன.

ADVERTISEMENT

திரைப்படச் சட்டம் 1952 மற்றும் திரைப்பட சான்றிதழ் விதிமுறைகள் 2024-ன்படி மத்திய திரைப்படத் தணிக்கைவாரியம் செயல்படுகிறது. இந்த விதிமுறைகளின் பிரிவு 37-ன்படி திரைப்படங்களுக்கு சான்றிதழ் வழங்க 48 வேலை நாட்கள் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே ஆன்லைன் சான்றிதழ் முறை அமலாக்கத்திற்கு பின்னர் தற்போதைய சராசரி கால அவகாசம் 18 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி திரைப்படங்களுக்கு 18 நாட்களுக்குள்ளும் குறும்படங்களுக்கு 3 நாட்களுக்குள்ளும் தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட வேண்டும்.

திரைப்படங்களை மறு ஆய்வுக் குழுக்கு அனுப்புவதற்கான கால அவகாசம் இந்தச் சட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பதிலளித்தார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share