செல்போன் ஹேக் : அன்புமணி மேனேஜரை விசாரிக்க ராமதாஸ் புகார்!

Published On:

| By vanangamudi

தைலாபுரம் தோட்டத்தில் ஒட்டுக்கேட்கும் கருவி எடுக்கப்பட்ட நிலையில், தற்போது செல்போன் மற்றும் வீட்டு சிசிடிவி ஹேக் செய்யப்பட்டதாக பாமக நிறுவனர் ராமதாஸ் சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அன்புமணியின் நிதி மேலாளர் பெயரை குறிப்பிட்டு புகார் தெரிவித்துள்ளார் ராமதாஸ்.

பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் மகனும் தலைவருமான அன்புமணி ராமதாஸுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்தநிலையில், தனது வீட்டில் ஒட்டுகேட்கும் கருவி வைக்கப்பட்டிருந்ததாகவும், அதை யார் வைத்தார்கள் என கண்டுபிடிக்க வேண்டும் என்றும் கடந்த ஜூலை 15ஆம் தேதி கிளியனூர் காவல்நிலையத்தில் ராமதாஸ் புகார் அளித்திருந்தார்.

இதையடுத்து தனது மகன் அன்புமணிதான் அந்த ஒட்டுக்கேட்கும் கருவியை வைத்து வேவு பார்த்தார் என்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

இந்தநிலையில் இன்று (ஆகஸ்ட் 5) ராமதாஸ் சார்பில் விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் டிஎஸ்பி உமாதேவியிடம் புகார் ஒன்று அளிக்கப்பட்டது.

ADVERTISEMENT

ராமதாஸின் தனி செயலாளர் சுவாமிநாதன் அளித்த புகாரில், “மருத்துவர் ராமதாஸ் இல்லமான தைலாபுரம் தோட்டத்தில் சுமார் இரண்டு வருடங்களுக்கு முன் சசிகுமார் மூலம்  Act wifi கனெக்ஷன், சென்னையைச் சேர்ந்த நிறுவனம் மூலம் சிசிடிவி கனெக்சன் மற்றும் வைஃபை இணைப்பு கொடுத்தனர்.

இந்த நிலையில் தைலாபுரம் தோட்டத்தில் நடக்கும் நிகழ்வுகள் உடனுக்குடன் வெளியில் உள்ள நபர்களுக்கு சென்றடைவதை சந்தேகத்தின் பெயரில் தனியார் நிறுவனம் மூலம் ஆராய்ச்சி செய்ததில், வீட்டில் நடைபெறும் நிகழ்வுகள் மற்றும் ராமதாஸ் தொலைபேசி (port forwarding method) மூலம் வெளியில் உள்ள நபர்களுக்கு மாற்றம் செய்து பின் சென்னையில் உள்ள நபர்களுக்கு செய்திகள் வந்தடைந்ததை உறுதி செய்தோம். 

ADVERTISEMENT

எனவே ராமதாஸ் இல்ல நடவடிக்கை மற்றும் தொலைபேசியை சட்ட விரோதமாக ஹேக் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 

காவல்துறை விசாரணையின் போது ஐபி அட்ரஸ் கொடுத்து ஒத்துழைப்பு வழங்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள சசிக்குமார், அன்புமணி ராமதாஸின் நிதி மேனேஜராக உள்ளார்.

இந்த புகார் தொடர்பாக மின்னம்பலம் சார்பில் சசிக்குமாரை தொடர்புகொண்டு கேட்டபோது, “8 வருடங்களுக்கு மேலாக அன்புமணி அலுவலகத்தில் வேலை செய்து வருகிறேன். ராமதாஸுக்கு மாத்திரை வேண்டும் என்றாலோ… ஷோபா வேண்டும் என்றாலோ… தோட்டத்தில் பிளம்பிங் வொர்க் என எதுவாக இருந்தாலும் என்னைதான் கேட்பார்கள். நான் தான் ஆட்களை அனுப்பி வைப்பேன். அப்படிதான் சிசிடிவி கேட்டார்கள். அதனால் சிசிடிவி கேமராக்களை பொறுத்த ஆட்களை அனுப்பி வைத்தேன். மற்றபடி எனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை. ராமதாஸுக்கு புதிய பிஏ-வாக இந்த புகார் கொடுத்த சுவாமிநாதன் நியமிக்கப்பட்டிருக்கிறார். அவர்தான் இந்த பிரச்சினைகளை எல்லாம் தேவையில்லாமல் செய்துகொண்டிருக்கிறார். மற்றபடி எனக்கு எதுவும் தெரியாது” என்றார்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share