“என் பையனை அந்தப் பெரிய காலேஜ்ல சேர்த்துட்டேன்… கேம்பஸ் எல்லாம் சும்மா ஃபாரின் மாதிரி இருக்கு!” என்று பெருமை பேசும் பெற்றோரா நீங்கள்? கொஞ்சம் பொறுங்க. நீங்கள் ஆசை ஆசையாகச் சேர்க்கும் அந்தப் பல்கலைக்கழகம் உண்மையானதுதானா? அல்லது போலிப் பல்கலைக்கழகமா? என்பதைத் தீர விசாரித்தீர்களா?
நாடு முழுவதும் பிளஸ் 2 தேர்வுகள் முடிந்து, மாணவர்கள் கல்லூரி அட்மிஷன் வேட்டையில் இறங்கியுள்ள இந்த நேரத்தில், சிபிஎஸ்இ (CBSE) ஒரு முக்கியமான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
“போலிப் பல்கலைக்கழகங்களில் சிக்கி வாழ்க்கையைத் தொலைத்துவிடாதீர்கள்” என்பதுதான் அந்த வார்னிங் மெசேஜ்!
என்ன பிரச்னை? இந்தியாவில் பல கல்வி நிறுவனங்கள், “நாங்கதான் பெஸ்ட் யுனிவர்சிட்டி” என்று கவர்ச்சிகரமான விளம்பரங்களைக் கொடுத்து மாணவர்களை வளைக்கின்றன. ஆனால், உண்மையில் அவற்றுக்குப் பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) அங்கீகாரமே இருக்காது.
இதைச் சுட்டிக்காட்டியுள்ள சிபிஎஸ்இ செயலாளர் ஹிமான்ஷு குப்தா, “மாணவர்கள் எந்தக் கல்லூரியில் சேருவதாக இருந்தாலும், அந்த நிறுவனம் யுஜிசி-யால் அங்கீகரிக்கப்பட்டதா என்பதை முதலில் உறுதி செய்துகொள்ளுங்கள்” என்று அறிவுறுத்தியுள்ளார்.
டிகிரி செல்லாது பாஸ்! தெரியாத்தனமாக இது போன்ற போலிப் பல்கலைக்கழகங்களில் படித்துப் பட்டம் பெற்றால், அந்தச் சான்றிதழை வைத்துக்கொண்டு அரசு வேலைக்கோ அல்லது வேறு உயர்கல்விக்கோ செல்ல முடியாது. அது வெறும் காகிதம்தான்! யுஜிசி விதிகளின்படி, அங்கீகரிக்கப்படாத நிறுவனங்கள் ‘பல்கலைக்கழகம்’ என்ற பெயரையே பயன்படுத்தக் கூடாது.
செக் செய்வது எப்படி? மாணவர்கள் யாரையும் நம்பி ஏமாற வேண்டாம். நீங்களே செக் பண்ணலாம்.
www.ugc.ac.in என்ற இணையதளத்திற்குச் செல்லுங்கள். அதில் ‘Fake Universities’ என்ற பட்டியல் இருக்கும்.
தற்போது இந்தியாவில் டெல்லி, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் 20க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் போலியானவை என்று யுஜிசி பட்டியலிட்டுள்ளது. அந்த லிஸ்டில் நீங்கள் சேரும் கல்லூரி பெயர் இருக்கிறதா என்று பார்த்துவிடுங்கள்.
கண்ணாடி இட்ட கட்டிடங்களையும், ஏசி வகுப்பறைகளையும் பார்த்து மயங்கிடாதீங்க. அட்மிஷன் போடுறதுக்கு முன்னாடி, அந்த காலேஜ் யுஜிசி இணையதளத்தில் இருக்கான்னு ஒரு சின்ன லுக்க விடுங்க. குறிப்பா, ‘நாங்க நேரடியா டிகிரி தரோம்’னு சொல்ற ஆன்லைன் மற்றும் தொலைதூரக் கல்வி நிறுவனங்களிடம் ரொம்பவே உஷாரா இருக்கணும். விசாரிப்போம்… விழிப்புடன் இருப்போம்!”
