“காலையில ஸ்கூலுக்குப் போற பிள்ளைங்க பத்திரமா வீட்டுக்குத் திரும்பணுமே… ரோட்டுல போற நாயெல்லாம் துரத்துதே!” என்று வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு இருக்கும் பெற்றோரா நீங்கள்?
உங்கள் கவலைக்கு ஒரு நல்ல தீர்வு கிடைத்துவிட்டது! பள்ளி வளாகங்களுக்குள் சுற்றித் திரியும் தெருநாய்களால் (Stray Dogs) மாணவர்களுக்கு ஏற்படும் ஆபத்தைத் தடுக்க, மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) ஒரு அதிரடியான வழிகாட்டு நெறிமுறையை (SOP) வெளியிட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் சமீபத்திய அறிவுறுத்தலின்படி, மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ-யின் ‘ஸ்ட்ரிக்ட்’ உத்தரவுகள்:
கால்நடைப் பராமரிப்புத் துறை வகுத்துள்ள விதிகளின்படி, அனைத்துப் பள்ளிகளும் இந்தப் புதிய நடைமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்று சிபிஎஸ்இ உத்தரவிட்டுள்ளது.
முக்கிய அம்சங்கள் என்ன?
- விழிப்புணர்வு முகாம்கள்: நாய் கடித்தால் என்ன செய்ய வேண்டும்? நாய்களிடம் எப்படிப் பாதுகாப்பாக இருப்பது? என்பது குறித்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்குப் பள்ளிகளில் விழிப்புணர்வு வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.
- நோடல் அதிகாரி (Nodal Officer): ஒவ்வொரு பள்ளியிலும் இதற்கெனத் தனியாக ஒரு ‘நோடல் ஆபீஸர்’ நியமிக்கப்பட வேண்டும். பள்ளி வளாகத்திற்குள் நாய்கள் வராமல் தடுப்பதும், சுத்தம் பேணுவதும் இவரின் பொறுப்பு. இவருடைய பெயர் மற்றும் போன் நம்பர் பள்ளியின் வாசலில் ஒட்டப்பட்டிருக்க வேண்டும்.
- உடனடி ஆக்ஷன்: பள்ளி வளாகத்திற்குள் தெருநாய்கள் சுற்றித் திரிந்தால், உடனடியாக உள்ளாட்சி அமைப்புகள் (Municipal Authorities) மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன் அவற்றை அப்புறப்படுத்த வேண்டும்.
- பாதுகாப்பு வேலி: பள்ளியின் சுற்றுச்சுவர், கேட் மற்றும் வேலிகள் சரியாக உள்ளனவா என்பதை உறுதி செய்ய வேண்டும். நாய்கள் உள்ளே நுழையாதவாறு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட வேண்டும்.
- குப்பை மேலாண்மை: நாய்கள் குப்பையைத் தேடித்தான் உள்ளே வருகின்றன. எனவே, பள்ளி வளாகத்தில் உணவுக்கழிவுகள் தேங்காமல், தினமும் முறையாக அப்புறப்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
ஆய்வு நடக்கும் ஜாக்கிரதை:
வெறுமனே உத்தரவு போட்டதோடு நிக்காம, “சரியா ஃபாலோ பண்றீங்களா?”னு கண்காணிக்கவும் ஏற்பாடு செஞ்சிருக்காங்க. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அரசு அதிகாரிகள் பள்ளிக்கு வந்து ஆய்வு நடத்துவார்கள். இதில் குறைபாடுகள் கண்டறியப்பட்டால், பள்ளி நிர்வாகத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
பெற்றோர்களே… உங்க பிள்ளை படிக்கிற ஸ்கூல்ல இந்த ‘நோடல் ஆபீஸர்’ யாருன்னு கேட்டுத் தெரிஞ்சுக்கோங்க. ஸ்கூல் காம்பவுண்டுக்குள்ள நாய் சுத்துறத பார்த்தா, உடனே அவருக்குப் போன் பண்ணிப் புகார் கொடுங்க. அதே மாதிரி, பிள்ளைங்களுக்கு ‘நாய் துரத்தினா ஓடக்கூடாது, கல்லால அடிக்கக்கூடாது’னு சொல்லித் தர்றது நம்ம கடமை.
பள்ளி நிர்வாகிகளே… ‘ஏதோ உத்தரவு வந்திருக்கு’னு அலட்சியமா இருக்காதீங்க. மாணவர்களின் பாதுகாப்புதான் முக்கியம். குறிப்பா, கேண்டீன் பக்கம் குப்பை சேராம பாத்துக்கிட்டாலே பாதிப் பிரச்சினை தீர்ந்துடும்!
