41 பேரை பலி கொண்ட கரூர் துயர சம்பவம் தொடர்பாக தவெக பொதுச்செயலாளர்கள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, இணை பொதுச்செயலாளர் நிர்மல்குமார், கரூர் மா.செ. மதியழகன் உள்ளிட்டோரிடம் டெல்லியில் சிபிஐ அதிகாரிகள் இன்று (டிசம்பர் 29) காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை சுமார் 9 மணி நேரம் தொடர் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை நாளையும் (டிசம்பர் 30) தொடருகிறது.
கரூரில் தவெக தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27-ந் தேதி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியாகினர். 100-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
இது தொடர்பான வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு மாற்றியது. டெல்லியில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த சிபிஐ அதிகாரிகள், கரூருக்கு வந்து முகாமிட்டு 200க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தினர்.
தவெக நிர்வாகிகள், காவல்துறையினர், மருத்துவர்கள், ஆம்புலன்ஸ் ஊழியர்கள், ஓட்டுநர்கள், கரூர் வேலுசாமிபுரம் பொதுமக்கள், உயிரிழந்தோர் குடும்பத்தினர், பாதிக்கப்பட்டவர்கள், படுகாயமடைந்தவர்கள் என அனைத்து தரப்பிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் அடுத்த கட்ட விசாரணை இன்று நடைபெற்றது. தவெகவின் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார், மதியழகன் உள்ளிட்டோர் ஆஜராகினர். இதேபோல கரூர் மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்டோரும் இன்றைய விசாரணைக்கு ஆஜராகினர்.
தவெகவின் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோரிடம் காலை 10 மணிக்கு விசாரணை தொடங்கியது. இவ்விசாரணை இரவு 6.45 மணி வரை சுமார் 9 மணி நேரம் தொடர்ச்சியாக நடைபெற்றது. கரூர் சம்பவம் தொடர்பாக பல்வேறு கேள்விகளை சிபிஐ அதிகாரிகள் கேட்டு பதிலைப் பெற்று பதிவு செய்தனர்.
இந்த விசாரணை 2-வது நாளாக நாளையும் நடைபெற உள்ளது. அனைத்து தரப்பிடமும் விசாரணை நடத்தி பெறப்படும் பதில்களின் அடிப்படையில் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும்.
