தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யிடம் நாளையும் சிபிஐ விசாரணை மேற்கொள்ளவுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி கரூரில் விஜய் உரையாற்றிய போது அவரை காண வந்தவர்களில் 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர்.
இதுதொடர்பாக இன்று (ஜனவரி 12) நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய்யிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இதற்காக இன்று காலை 6.20 மணியளவில் நீலாங்கரை இல்லத்தில் இருந்து காரில் புறப்பட்டு சென்னை விமான நிலையத்துக்கு வந்த விஜய் காலை 7.10 மணியளவில் சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தார்.
பின்னர் தனி விமானம் மூலம் டெல்லி விமான நிலையம் வந்த விஜய் அங்கிருந்து காரில் சிபிஐ அலுவலகத்துக்கு சென்றார்.
அங்கு கேள்விகளுடன் தயாராக இருந்த சிபிஐ அதிகாரிகள், “உங்கள் பெயர் என்ன என்பதில் தொடங்கி கரூரில் கூட்ட நெரிசலில் அத்தனை பேர் உயிரிழந்த போதும் அங்கிருந்து கிளம்பியது ஏன்?” என்பது வரை பல்வேறு கேள்விகளை எழுப்பியதாக தகவல்கள் வருகின்றன.
இந்தநிலையில், விசாரணை முடிந்து இன்று மாலை சிபிஐ அலுவலகத்தில் இருந்து காரில் புறப்பட்டுச் சென்றார். அப்போது ஆதவ் அர்ஜுனாவும் உடனிருந்தார்.
இந்தசூழலில் விஜய்யிடம் நாளையும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளதாகவும், இதன் காரணமாக இன்றிரவு டெல்லியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் விஜய் தங்கவுள்ளார் என்றும் தகவல்கள் வருகின்றன.
