கரூரில் நடந்த கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவகாரம் குறித்து இன்று (நவம்பர் 3) நடிகர் விஜய்யின் தவெக அலுவகத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளனர்.
கரூர் வேலுச்சாமி புறத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி நடந்த தமிழக வெற்றி கழகத்தின் பிரச்சாரக் கூட்டத்தில் கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் பேசியபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவம் குறித்து தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் , இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார், மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கரூர் வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. இதைத்தொடரந்து குஜராத்தை சேர்ந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் குமார் தலைமையில் சிபிஐ அதிகாரிகள் கடந்த மாதம் 17ஆம் தேதி முதல் விசாரணையை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கரூர் சம்பவம் நடந்த பகுதிகளில் உள்ள மக்களிடம் ஒரு குழுவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மற்றொரு குழுவினர் இன்று (நவம்பர் 3) சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் சுமார் ஒரு மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.
இதைத்தொடர்ந்து இணை பொது செயலாளர் சிடி நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “சிபிஐ அதிகாரிகள் சம்மன் கொடுக்க வந்தனர். மேலும் பரப்புரை வாகனத்தின் சிசிடிவி பதிவுகள், கலந்து கொண்டவர்களின் பெயர்கள் உள்ளிட்ட சில விபரங்களை கேட்டுள்ளனர். இந்த தகவல்களை நாங்கள் அடுத்த மூன்று, நான்கு நாட்களில் கொடுப்பதாக தெரிவித்துள்ளோம்” என்றார்.
