கரூர் பெருந்துயரம் தொடர்பாக விஜய்யிடம் இரண்டாம் கட்டமாக சிபிஐ விசாரணை நடத்திய நிலையில், இதுதொடர்பாக தவெக மூத்த நிர்வாகி சி.டி.ஆர்.நிர்மல் குமார் விளக்கமளித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் நடந்த விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
இதுதொடர்பாக இரண்டாம் கட்டமாக விஜய்யிடம் சிபிஐ அதிகாரிகள் இன்று (ஜனவரி 19) காலை 11 மணியளவில் விசாரணையை தொடங்கினர். மாலை 4.30 மணியளவில் விசாரணை நிறைவடைந்து சிபிஐ அலுவலகத்தில் இருந்து விஜய் புறப்பட்டுச் சென்றார்.
இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய தவெக-வின் இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார், “இரண்டாவது கட்டமாக எங்களுடைய தலைவருக்கு விட்னஸ் சம்மன் அனுப்பப்பட்டது. எனவே எங்களுக்கு உகந்த தேதி இன்றைய தினம் என்பதால், இன்று வந்து சிபிஐ அதிகாரிகளுக்கு விஜய் ஒத்துழைப்பு கொடுத்தார்.
இந்த நிகழ்ச்சியில் என்னென்ன நடந்தது? எவ்வாறு நடந்தது? விஜய்க்கான ப்ரொகிராம் பற்றிய அட்டவணை என தேவையான தகவல்களை இன்று அதிகாரிகள் கேட்டனர்.
மீண்டும் அவருக்கு சம்மன் கொடுக்கவில்லை. காலையில் இருந்து திமுக சார்ந்த ஊடகங்கள் பல வதந்திகளை பரப்பி வருகிறார்கள்.
எங்கள் தலைவர் மற்றும் கட்சியினர் மீது பல்வேறு தகவல்களை பரப்பி வருகிறார்கள். இவை அனைத்தும் பொய்யான தகவல்கள். கைது, சார்ஜ்ஷீட்டில் பெயர் சேர்க்கப்பட்டது என்றெல்லாம் சொன்னார்கள். இவை அனைத்தும் பொய்” என்றார்.
அப்போது எந்தெந்த ஊடகம் என சொல்ல முடியுமா என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினர். இதற்கு நிர்மல் குமார், சன் நியூஸ், கலைஞர் செய்திகள் என்று தெரிவித்தார்.
இதற்கு அந்த செய்தியாளர் தவறான தகவலை சொல்ல வேண்டாம் என்று மறுப்புத் தெரிவித்தார்.
ஆனால் இதற்கு பதிலளிக்காமல் தொடர்ந்து பேசிய நிர்மல் குமார், “எங்களுக்கு மீண்டும் சம்மன் கொடுக்கவில்லை. தேவைப்பட்டால் ஒத்துழைப்பு கொடுப்போம்” என்றார்.
அதுபோன்று கடந்த முறை உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாடு வந்த போது, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், ’கரூர் துயரத்துக்கு காரணம் செந்தில் பாலாஜி என்று கூறினார். இது சம்பந்தமாக சம்மன் அனுப்பப்பட்டதா? சம்பந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டாரா? என ஊடகங்கள் கேள்வி எழுப்பியிருக்க வேண்டும். ஆனால் பொய் செய்திகள் பரப்பப்பட்டு வருகிறது” என்று கூறினார்.
