எதற்கெடுத்தாலும் சிபிஐ விசாரணை கேட்கும் எடப்பாடி பழனிசாமி, கொடநாடு வழக்கில் ஏன் சிபிஐ விசாரணை கேட்கவில்லை என்று செங்கோட்டையன் கேள்வி எழுப்பி உள்ளார்.
அதிமுகவின் மூத்த அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரனை தேவர் குரு பூஜை நாளில் சந்தித்தார். இதை காரணம் காட்டி செங்கோட்டையனை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுகவில் இருந்து நீக்கினார். தற்போது அதிமுக முன்னாள் எம்பி சத்யபாமா, ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக பொருளாளர் கந்தவேல் முருகன், நம்பியூர் முன்னாள் ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியம் உள்ளிட்ட 14 பேர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று (நவம்பர் 7) கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், எதற்கெடுத்தாலும் சிபிஐ விசாரணை கேட்கிறார்கள். ஆனால் நம்மை வாழ வைத்த புரட்சி தலைவி அம்மாவின் கொடநாடு பங்களாவில் ஏற்பட்ட கொலை, கொள்ளை வழக்கில் ஒரு நாளாவது சிபிஐ விசாரணை வேண்டும் என்று குரல் கொடுக்கப்பட்டுள்ளதா என்பதை நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். என்னை B டீம் என்றார்கள்.. யார் B டீமாக இருக்கிறார்கள் என்பதை இதன் மூலம் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார். மேலும் 3 முறை அம்மா இருந்த போதும், மறைந்த பிறகும் ஓபிஎஸ்-ஐ மட்டும் தான் முதலமைச்சராக அமர்த்தினார்கள். ஏன் உங்களை முதலமைச்சராக அமர்த்தவில்லை என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.
கொல்லைப் புறமாக முதலமைச்சரானவர்
நான் முதலமைச்சரான பிறகு தான் இவருக்கு அமைச்சராக இடம் தந்தேன் என்று சொன்னார். எங்களைப் போன்றவர்கள் முன்மொழியவில்லை என்று சொன்னால் இவர் முதலமைச்சராகவே வந்திருக்க முடியாது இவரைப் பொறுத்தவரை கொல்லைப் புறமாக முதலமைச்சராக வந்தவர் என்பது நாடறிந்த உண்மை. இன்று என்னை கொச்சைப்படுத்தும் வகையில் நான் தான் அமைச்சரவையில் இடம் தந்தேன் என்று சொல்வது வேதனை அளிக்கக்கிறது என்றார்.
அது மட்டும் இல்லாதமல் நான் ஒரு சிற்றரசை போல, தொகுதி மக்களுக்கு எந்த பணியையும் ஆற்றாதது போல் கருத்துக்கள் பரிமாறப்பட்டுள்ளது. ஆனால் பழனிசாமி கோபிசெட்டிபாளையம் வந்தபோது, “ஏண்ணா.. எல்லா பணத்தையும் தொகுதியிலேயே கொண்டு வந்து கொட்டி விட்டீங்க போல.. எடப்பாடியிலேயே இப்படியெல்லாம் ரோடு இல்லை” அப்போது ஒரு மாதிரி பேசிவிட்டு இப்போது மாற்றி பேசுவது வேதனை அளிக்கிறது என்றார்.
