கரூர் பெருந்துயரம் தொடர்பாக தவெக தலைவர் விஜய்யிடம் நடத்தப்பட்ட சிபிஐ விசாரணை நிறைவடைந்துள்ளது.
கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் நடந்த விஜய் பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. கடந்த ஜனவரி 12ஆம் தேதி விஜய்யிடம் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் இரண்டாம் கட்டமாக இன்று (ஜனவரி 19) சிபிஐ அதிகாரிகள் விஜய்யிடம் விசாரணை மேற்கொண்டனர்.
காலையில் 11 மணியளவில் தொடங்கிய விசாரணை உணவு இடைவெளியோடு சேர்த்து 5 மணி நேரத்துக்கும் மேல் நீடித்த நிலையில் 4.30 மணியளவில் நிறைவடைந்தது.
அப்போது, காவல்துறையினர் மீது விஜய் சுமத்திய குற்றச்சாட்டுகள் உள்ளிட்டவற்றுக்கு சிபிஐ அதிகாரிகள் ஆதாரங்கள் கேட்டதாகவும், அன்றைய தினம் தாமதமாக வந்தது முதல் மக்கள் கட்டுக்கடங்காமல் கூடியது வரை நடந்த அனைத்தும் உங்கள் கவனத்துக்கு வந்ததா என கேட்டதாகவும் தகவல்கள் வருகின்றன. சில கேள்விகளுக்கு பதிலளிக்க விஜய் அவகாசம் கேட்டதாகவும் சொல்லப்படுகிறது.
இந்தநிலையில் மீண்டும் விஜய்யை விசாரணைக்கு அழைப்பதா வேண்டாமா என சிபிஐ அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
விசாரணை முடிந்து விஜய் சிபிஐ அலுவலகத்தில் இருந்து காரில் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
