சரமாரி கேள்விகள்.. கண்கலங்கிய விஜய்.. டெல்லி சிபிஐ விசாரணையில் என்ன நடந்தது? முழு விவரம்

Published On:

| By Mathi

Vijay CBI

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தமது கரூர் பிரசார கூட்டத்தில் 41 பேர் பலியானது தொடர்பாக டெல்லியில் சிபிஐ அதிகாரிகள் முன் நேற்று ஜனவரி 12-ந் தேதி விசாரணைக்கு ஆஜரானார். இந்த விசாரணை சுமார் 7 மணி நேரம் நடைபெற்றது.

கரூர் சம்பவம் தொடர்பாக விஜய், டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் உள்ளிட்டோரை சிபிஐ விசாரணைக்கு அழைக்கிறது என முதன் முதலில் நமது மின்னம்பலத்தில் பதிவு செய்திருந்தோம்.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து விஜய், ஜனவரி 12-ந் தேதி டெல்லியில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சிபிஐ, சம்மன் அனுப்பியது.

விஜய் நேற்று காலை 10.30 மணிக்கு சிபிஐ அலுவலகத்துக்குள் சென்றார். முதலில் அவரது கையில் இருந்த BAG சோதனையிடப்பட்டது. அதில் சிபிஐ அதிகாரிகளின் கேள்விகளுக்கு பதில் அளிப்பதற்கான சில குறிப்பு தாள்களும், பிஸ்கட் பாக்கெட்டுகளும் இருந்தன.

ADVERTISEMENT

அப்போது விஜய்யுடன் ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார் ஆகியோர் உடன் சென்றனர். ஆனால் ஆதவ் அர்ஜூனா வரவேற்பறையில் அமர வைக்கப்பட்டார். நிர்மல்குமார் வழக்கறிஞர் என்பதால் விஜய்யுடன் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

விஜய்யிடம் விசாரணை நடந்த அறைக்கு பக்கத்து அறையில் நிர்மல்குமார் அமர்ந்திருந்தார்.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து விஜய்யிடம் சிபிஐ அதிகாரிகள் கேள்விகளை கேட்க தொடங்கினர்.

விஜய்யிடம் கேட்கப்பட்ட கேள்விகள், அதற்கான பதில்கள் உடனுக்குடன் டைப் செய்யப்பட்டன. பல கேள்விகளுக்கு விஜய் ஆங்கிலத்தில் பதிலளித்தார்; சில கேள்விகளுக்கு தமிழில் பதில் கூறினார்.

விஜய்யிடம்

  • கரூர் கூட்டத்துக்கு எந்த தேதியில் அனுமதி வாங்கினீங்க?
  • கரூர் கூட்டத்துக்கு எத்தனை மணிக்கு போனீங்க?
  • கரூர் கூட்டத்துக்கு போகும் போது போலீஸ் உங்களை எத்தனை மணிக்கு வர சொன்னாங்க?
  • கரூர் கூட்டத்துல எவ்வளவு நேரம் பேசுனீங்க?
  • நீங்க பேசுகிட்டு இருக்கும் போது செருப்பு, கல் வீசப்பட்டதா?
  • உங்க கூட்டத்துக்கு வந்து இறந்தவங்களை பத்தின தகவல் எப்ப தெரியும்?
  • கரூரிலேயே இருந்து இறந்தவங்களை ஏன் பார்க்கலை?
  • அப்படி இறந்தவங்களை நீங்க பார்க்கக் கூடாதுன்னு உங்களை தடுத்தது யாரு?
  • கரூரில் இருந்து புறப்பட்டு நடுவுல 1 மணிநேரம் எங்க இருந்தீங்க? யார் யார் கிட்ட பேசுனீங்க?
  • பிரசார பஸ்ல லைட்டை ஆன்/ ஆஃப் செஞ்சது எதுக்காக?
  • கரூர் கூட்டத்துக்கு எவ்வளவு போலீஸ் பாதுகாப்பு தந்தாங்க?
  • ஆதவ் அர்ஜூனா உட்பட உங்க கூட இருந்தவங்க போலீஸ் என்ன சொன்னதா சொன்னாங்க?

என அடுக்கடுக்கான கேள்விகள் கேட்கப்பட்டன. சிபிஐ அதிகாரிகள் தங்களுக்கே உரித்தான பாணியில் Smooth- ஆகவும் ஆனால் துருவித் துருவியும் கேள்விகளை கேட்டனர்.

இந்த கேள்விகளுக்கு ஒவ்வொன்றாக விஜய் பதிலளித்தார்.

விஜய் அளித்த பதில்களில், “திருச்சி கூட்டத்தை முடித்துவிட்டு பெரம்பலூருக்கு போகும் போது, அங்கே நெரிசல் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.. அதனால் போக வேண்டாம் என போலீஸ் அதிகாரிகள் சொன்னார்கள்.. அதனால நானும் போகலை.. அதே போல கரூரிலும் நெரிசல் ஏற்படக் கூடிய வாய்ப்பிருக்கிறது என முன்கூட்டியே போலீஸ் அதிகாரிகள் கூறியிருந்தா நானும் போயிருக்கமாட்டேன்” என்றார்.

அப்போது குறுக்கிட்ட விசாரணை அதிகாரிகள், “கூட்டம் நடந்த வேலுசாமிபுரத்துக்கு முன்னதாக உங்க பஸ்ஸை நிறுத்துங்க ஆதவ் அர்ஜூனாவிடம் போலீஸ் அதிகாரிகள் சொல்லி இருக்காங்க.. ஆதவர் அர்ஜூனாதான் கூட்டம் கூடியிருந்த வேலுசாமிபுரத்துக்குள் பஸ்ஸை கொண்டு போங்கன்னு டிரைவர் கிட்ட சொல்லியிருக்காரு.. அது உங்களுக்கு தெரியுமா” என கேட்க, “எனக்கு தெரியலை” என விஜய் பதில் சொல்லி இருக்கிறார்.

அத்துடன், சில வீடியோ கிளிப்பிங்குகளை போட்டு காட்டியும் அதனடிப்படையிலும் பாதுகாப்புக்கு இருந்த போலீசார் எண்ணிக்கை உள்ளிட்டவை குறித்தும் விஜய்யிடம் அதிகாரிகள் கேள்விகளை கேட்டனர்.

மேலும், தமது பிரசார பேருந்தின் லைட் கனெக்‌ஷன் லூசாக இருந்ததால்தான் லைட் ஆன்/ ஆஃப் ஆனது என்றும் விஜய் கூறினார்.

தவெக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார், பேருந்து ஓட்டுநரிடம் ஏற்கனவே இதே போல் கேட்கப்பட்ட கேள்விகள்- அவர்கள் தந்த பதில்களை ஒப்பிட்டும் பார்த்தனர் சிபிஐ அதிகாரிகள். விஜய்யும் பொறுமையாகவும் பதற்றம் இல்லாமல் நிதானமாகவும் பதில்களை அளித்தார்.

கண்கலங்கிய விஜய்

  • கரூரில் இறந்தது எத்தனை பேர்?
  • கரூரில் உயிரிழப்பு செய்திகள் வந்த போது என்ன மனநிலையில் இருந்தீங்க?

என “உயிரிழப்புகளை” பற்றி சிபிஐ அதிகாரிகள் கேள்வி கேட்ட போது, விஜய் கண்கலங்கியபடியே சில பதில்களைக் கூறினார். அவரை சிறிது நேரம் சிபிஐ அதிகாரிகள் தேற்றினர்.

மதிய உணவு

இந்த விசாரணையின் போது விஜய்யிடம் மதிய உணவை ஆர்டர் செய்து கொள்ள அதிகாரிகள் கூறினர். அத்துடன், ‘எங்க கேண்டீனில் சாப்பாடு நல்லா இருக்கும்’ எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் விஜய், தமக்கு சாப்பாடு எதுவும் வேண்டாம் என கூறிவிட்டு தன் பேக்கில் வைத்திருந்த பிஸ்கட்டுகளை மட்டும் எடுத்து சாப்பிட்டார்.

இந்த விசாரணையின் போது, “நீங்க இவ்வளவு சிம்பிளா இருப்பீங்கன்னு நினைக்கலை சார்”னும் விசாரணை அதிகாரிகள் விஜய்யை பாராட்டினர். சில அதிகாரிகளோ, “எங்க குழந்தைகளுக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்” என செல்பியும் எடுத்துக் கொண்டனர்.

இதன் பின்னர் மாலை 6.30 மணியளவில் விசாரணை முடிவடைந்தது. அப்போது, “மீண்டும் விசாரணைக்கு அழைக்கிறோம்.. நீங்க வாங்க” என்று சிபிஐ அதிகாரிகள் சொல்ல, “நீங்க எப்ப கூப்பிட்டாலும் கண்டிப்பாக விசாரணைக்கு நான் வருகிறேன்” என அழுத்தமாகவே கூறிவிட்டு விஜய் அங்கிருந்து கிளம்பினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share