மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் சிபிஐ அதிர்ச்சி தகவல்களை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்திரகாளி அம்மன் கோவில் காவலாளியாக பணிபுரிந்தவர் அஜித்குமார். இந்த கோவிலுக்கு வந்த பேராசிரியர் நிகிதா தமது நகைகளை காணவில்லை என கொடுத்த புகாரின் அடிப்படையில் அஜித்குமாரை போலீசார் விசாரித்தனர். இந்த விசாரணையில் கொடூரமாக தாக்கப்பட்டு அஜித்குமார் மரணமடைந்தார்.
தமிழகத்தையே உலுக்கிய இந்த கொடூர காவல்நிலைய மரணம் தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது. இவ்வழக்கில் 10 போலீசார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் நடைபெற்று வரும் இவ்வழக்கில் நேற்று நீதிபதி ஸ்ரீமதி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, போலீசார் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தனர். ஆனால் போலீசாருக்கு ஜாமீன் தருவதற்கு சிபிஐ தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்த விசாரணையின் போது, “அஜித்குமார் மீதான நகை திருட்டு புகார் உண்மைதானா?” என நீதிபதி ஸ்ரீமதி கேள்வி எழுப்பினார். இதற்கு சிபிஐ தரப்பில், “நகை திருட்டு புகாருக்கு முகாந்திரம் எதுவுமே இல்லை” என தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, “ஒன்றுமே இல்லாத விஷயத்துக்காக ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளாரே” என நீதிபதி ஸ்ரீமதி வேதனை தெரிவித்தார். அத்துடன், ”இந்த கொலைக்கு காரணமான புகார்தாரர் (பேராசிரியர் நிகிதா) மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே?” என்றும் நீதிபதி ஸ்ரீமதி கூறினார். இவ்வழக்கு விசாரணை வரும் 16-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
