ஜாதி ஆணவப் படுகொலை (Caste Honour Killing) செய்யப்பட்ட நெல்லை ஐடி பணியாளர் கவின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து தமிழக அமைச்சர்கள் கே.என்.நேரு, அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் கனிமொழி எம்.பி ஆகியோர் ஆறுதல் தெரிவித்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தை அடுத்த ஆறுமங்கலத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி தமிழ்ச்செல்வி. இவர்களுக்கு 26 வயதில் கவின் என்ற மகன் இருந்தார்.
கவின் சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர் சுபாஷினி என்ற பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
கவின் வேறு ஜாதியை சேர்ந்தவர் என்பதால் சுபாஷினி வீட்டினர் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் கவின் கடந்த ஞாயிறன்று சென்னையில் இருந்து சொந்த ஊரான தூத்துக்குடிக்கு வந்தார். பாளையங்கோட்டையில் உள்ள மருத்துவமனைக்கு தனது தாத்தாவுடன் சென்றிருந்தார்.
அப்போது கவினை சுபாஷினியின் சகோதரர் சுர்ஜித் கொடூரமாக வெட்டி படுகொலை செய்தார். இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கவின் படுகொலைக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் கொலை செய்த சுர்ஜித் கைது செய்யப்பட்டார். அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொலை செய்த சுர்ஜித்தின் தந்தை சப் இன்ஸ்பெக்டர் சரவணன் தாய் சப் இன்ஸ்பெக்டர், கிருஷ்ணகுமாரி ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு (ஜூலை 30) காவல்துறையினர் சுர்ஜித்தின் தந்தை சப் இன்ஸ்பெக்டர் சரவனணை கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் இன்று (ஜூலை 31) காலை தூத்துக்குடி எம்.பி.கனிமொழி மற்றும் அமைச்சர்கள் கே.என் நேரு, அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கவினின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
குற்றம் செய்த அனைவரின் மீதும் நடவடிக்கை எடுப்பதில் முதலமைச்சர் உறுதியாக இருப்பதாக கவினின் பெற்றோரிடம் கனிமொழி தெரிவித்தார்.
அப்போது உயிரிழந்த கவினின் பெற்றோர் சுர்ஜித்தின் தாயையும் கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, “பெற்றோர்கள் தங்களது இளம் மகனை பறி கொடுத்துள்ள நிலையில் அவர்களுக்கு ஆதரவாக நிற்கிறோம். முதல்வர் சார்பில் பாதிக்கப்பட்ட பெற்றோரை சந்திக்க வந்திருக்கிறோம். நிச்சயமாக அவர்களுக்கு ஒரு நியாயம் கிடைக்கும் சூழலை அரசு உருவாக்கித் தரும் என்ற நம்பிக்கையை தர வந்துள்ளோம் என்றார்.
மேலும் சுர்ஜித்தின் தந்தை கைது செய்யப்பட்டுள்ள நிலையில் விசாரணைக்கு பின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இந்த வழக்கை முதல்வர் சிபிசிஐடிக்கு மாற்றி உள்ளார்.

நிச்சயமாக யாரையும் பாதுகாக்கும் சூழல் இல்லை. வழக்கில் சம்பந்தப்பட்ட யாராக இருந்தாலும் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள். ஜாதி ஆணவப் படுகொலைக்கு எதிராக சட்டம் இயற்றப்படும் என்று நம்புகிறேன்” என்றும் கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.