கப்பிகுளம் ஜெ.பிரபாகர்
ரிதன்யா’க்கள் தற்கொலையும், கவின்’கள் படுகொலையும் ஓரிரு நாள் செய்தித்தலைப்புகளில் இடம் பெற, நமது அன்றாட வாழ்க்கையைக் கடந்து கொண்டிருக்கிறோம்.

சாதிப்பெருமை, பொருளாதார அந்தஸ்து, வெட்டி கெளரவம், அக்கம் பக்கத்தவரால் ஏற்படும் போலி அவமானம் போன்ற அற்பக் காரணங்கள் ஒரு உயிரைப் பறிக்குமா என்று நம்மை நாமே கேட்டுக்கொண்டால் அதன் ஆழம் எத்தகு கொடூரமானது என நமக்குப் புரியும். நெல்லை பகுதியில் கொலையும், கூலிப்படையும், சாதிய வன்மமும் தீராத நோயாக பற்றிப் படர்ந்துள்ளன.

நெல்லையின் பெருமை :
”ஏல.. திருநெவேலியா நீ..” என்று தொடங்கும் உரையாடலில் அடுத்ததாக இடியென இறங்கும் கேள்வி, “நீங்க என்ன சாதி..?”.
திருநெல்வேலிக்கு வெளியே, சென்னை, கோயம்புத்தூர், திருப்பூர், மும்பை, டெல்லி சென்றாலும், வெளிநாடுகளில் இருந்தாலும், இருநபர்களின் சந்திப்பில் திருநெல்வேலிக்கே உரித்தான பெருமைகளைத் தாண்டி, உறவுகளை சிறுமைப்படுத்தும் சாதி பற்றிய கேள்விகளும் நிச்சயம் இடம் பெறும். சோத்துக்கே வழியில்லாம ஊரைவிட்டு வெளியேறி, வறுமைக்கு வாக்கப்பட்டு வெளியூர்ல பிழைக்கப் போனாலும் பெருமைக்கு சாதியைக் கட்டி அழுவுற கூட்டம் திருநெவேலிக்காரங்க.
தேசபக்தியில் முதலிடம் நெல்லைக்குத்தான் உண்டு என்று பெருமை பீற்றிக்கொள்வோம். அவ்வளவு ஏன் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழம்பெருமை கொண்ட, ஆதித்தநல்லூரும், சிவகளையும், கொற்கையும் தமிழர் நாகரிகத்தை உலகறியச் செய்தன.
சாகித்ய அகாடமி விருதுகள் பெற்ற தமிழ் எழுத்தாளர்களில் பெரும்பாலானவர்கள் நெல்லையைச் சேர்ந்தவர்கள். பல அரசியல் ஆளுமைகளையும் உருவாக்கிய மண். உயர்கல்வியில் சிறந்து விளங்கியதோடு தென்னகத்தின் ஆக்ஸ்போர்ட் என்ற பெருமை பெற்றது பாளையங்கோட்டை.
அந்த பாளையங்கோட்டையில்தான், சித்த மருத்துவரைக் காதலித்த, மென் பொறியாளர் துள்ளத்துடிக்க வெட்டிக்கொல்லப்பட்டுள்ளார். சாதியின் பெயரால் வெட்டிக் கெளரவத்திற்காக நடந்துள்ளது ஆணவக்கொலை.

கவின் ஆணவக்கொலை :
கொலையான கவின் செல்வகணேஷ் சிறுவயதில் இருந்தே படிப்பில் சிறந்து விளங்கியுள்ளார். பொறியியல் படிப்பை முடித்து சென்னையில் தனியார் ஐடி கம்பெனியில் மென் பொறியாளராக இருந்துள்ளார். லட்சங்களில் சம்பாதிக்கிறார். பள்ளித்தோழி சுபாஷினி உடன் 11ஆம் வகுப்பு முதல் நட்புடன் பழகி, நட்பு காதலாகவும் மலர்ந்துள்ளது.
சுபாஷினியும் சித்த மருத்துவம் படித்து விட்டு தனது வீட்டின் அருகேயுள்ள வேதா சித்த மருத்துவமனையில் வேலை செய்கிறார். சுபாஷினியின் தந்தையும், தாயும் காவல்துறையில் சார்பு ஆய்வாளர்கள்.
படிப்பிலும், பொருளாதாரத்திலும், வருமானத்திலும் கவின் எந்தவிதத்திலும் குறைவாக இல்லை. போதைப் பழக்கங்கள், கெட்ட நண்பர்கள் சகவாசமும் கிடையாது. ஆனால், கவின் பிறந்த சாதி அவரது காதலுக்கு தடையாக இருந்தது. கவின் தேவேந்திர குல வேளாளர் சாதியைச் சேர்ந்தவர், சுபாஷினி மறவர் சாதியில் பிறந்தவர்.
இந்தச் சூழ்நிலையில்தான் சுபாஷினியின் சகோதரர் சுர்ஜித், 27.07.2025 பிற்பகலில், கவினை தனியே அழைத்துச் சென்று கையில் அரிவாளால் வெட்டி, தப்பி ஓடியவரின் கண்களில் மிளகாய் பொடி தூவி, முகத்தை சிதைத்து கொடூரமாக கொலை செய்துள்ளார்.
உயிரை இழந்த கவின் குடும்பமும், கொலை வழக்கை சந்திக்கும் சுபாஷினி குடும்பமும் எதிர்காலத்தை இழந்து நிற்கிறார்கள்.

ஆணவக்கொலைக்கு காரணம் :
நெல்லை மண்ணில் கொலை பழகிப்போன ஒன்றுதான். அதுவும் முகத்தைச் சிதைத்து கொலை செய்வது தற்போதைய கூலிப்படைகளின் ஸ்டைலாக உள்ளது. சாதியின் பெயரில் டாட்டூ போடுவது, தலையிலும், கைகளிலும் சாதி அடையாள ரிப்பன் கட்டுவது, இன்ஸ்டா, பேஸ்புக்கில் வெட்டி சாதிப்பெருமையோடு ரீல்ஸ் போடுவது, சாதி அடையாளத்தை தூக்கிப்பிடிக்கும் வாட்ஸ் அப் குழுக்களில் வீண் அரட்டை அடிப்பது தமிழகம் முழுக்கவே அதிகரித்து இருந்தாலும், சாதிப் பெருமையின் வீச்சு நெல்லையில் கொஞ்சம் ஓவராகவே உள்ளது.
பாளையங்கோட்டை சிறையில் கூட சாதியின் அடிப்படையில்தான் குழுக்கள் இருக்கும். பெரும்பாலான கூலிப்படைகளுக்கு ஆள் சேர்க்கையே சிறையில் உள்ள சாதியக் குழுக்கள் மூலம் தான் நடக்கிறது.
நமது சமூகச் சூழல் சாதிய நாற்றத்தில் மூழ்கிக் கிடக்கிறது. அதில் சுபாஷினி குடும்பமும் சிக்கிக் கொண்டது. அதன் தொடர்ச்சியாக நடந்தது தான் கவின் ஆணவப்படுகொலை.
தீராத துயரங்கள் :
நெல்லை மண்ணில் கொலைகள் மட்டுமல்ல, ஆணவப்படுகொலைகளும் புதிதல்ல.
வில்லுப்பாட்டான ஐவர் ராசாக்கள் கதை, முத்துப்பட்டன் கதைகளில் ஆணவப்படுகொலை சுட்டிக்காட்டப்படும். கணியான் கூத்துக் கதைகளில் காதலும், சாதியின் பெயரால் நடந்த ஆணவப்படுகொலைகளையும் எடுத்துச் சொல்வார்கள்.
சாதியின் பெயரால் மட்டுமே ஆணவப்படுகொலைகள் நடக்கிறதா என்றால், முதன்மைக் காரணியாக ”சாதி ஆதிக்கம்” இருந்தாலும், தன் வீட்டுப் பெண்ணை இன்னொருவன் காதலிப்பதா என்ற ”குடும்ப ஆதிக்கம்”, ஒரு பொம்பள அவளே முடிவெடுப்பதா என்ற ”ஆணாதிக்கம்” போன்ற பல காரணங்களால் ஆணவக் கொலைகள் நடக்கின்றன.
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே வெள்ளங்குளியைச் சேர்ந்த இசக்கி சங்கர், களக்காட்டில், மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியில் அரசு ஊழியராகப் பணியாற்றுபவர். தனது கிராமத்தைச் சேர்ந்த சத்தியபாமா என்ற பெண்ணைக் காதலித்தார். முதலில் காதலை எதிர்த்த பெண் வீட்டார், நல்ல பையன், அரசு வேலை என்பதால், பின்னர் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர். ஆனால், 20.11.2018 அன்று தாமிரபரணி ஆற்றுக்கு குளிக்கச் சென்ற இசக்கி சங்கர் துண்டு துண்டாக வெட்டிக் கொல்லப்பட்டார். காதலன் இறந்த துக்கத்தில் காதலி சத்தியபாமா மறுநாள் மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டார்.
எப்படி நடந்தது இரண்டு மரணங்கள் என்று பார்த்தால், சத்தியபாமாவின் தம்பி 16 வயது மாணாவரிடம், ”அந்தச் சாதியிலயாலே உங்க அக்காவ கட்டிக் கொடுக்கப் போறீக” என்று உள்ளூர் இளைஞர்கள் தூண்டிவிட, சக மாணவர்களின் துணையோடு அந்த ஆணவக்கொலை செய்து விட்டு எதுவும் தெரியாதது போல பள்ளிக்கும் சென்றுவிட்டனர். இசக்கி சங்கர் BC கோனார் வகுப்பைச் சேர்ந்தவர். சத்தியபாமா MBC அகமுடையார் வகுப்பைச் சேர்ந்தவர்.
சரி காதலையும், காதலர்களையும் சட்டத்தின்படி பாதுகாக்க முடியுமா? என்றால், அங்கேயும் சிக்கல் உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அருகே வைப்பாறு உப்பளத்தில் வேலை செய்து வந்த சோலைராஜா, ஜோதி இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பெண் வீட்டில் எதிர்ப்பு இருந்ததால் குளத்தூர் காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்தனர். காவல்துறையினர் இரண்டு குடும்பத்தையும் அழைத்து, தம்பதிகளுக்கு எந்தத் தொந்தரவும் கொடுக்கக் கூடாது என்று எழுதி வாங்கி அனுப்பிவிட்டனர். ஆனால் மூன்று மாதம் கடந்த நிலையில் திடீரென ஒருநாள் இரவில் வீட்டு வாசலில் தூங்கிக் கொண்டிருந்த கர்ப்பிணி மனைவி ஜோதியும், அவரது கணவர் சோலைராஜாவும் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். 04.07.2019 அன்று நடந்த படுகொலையில் ஜோதியின் தந்தை அழகர் கைதானார். கொலைக்கு காரணம், சோலைராஜ் SC ஆதிதிராவிடர் வகுப்பு, ஜோதி SC தேவேந்திரர் வகுப்பைச் சேர்ந்தவர்.
காதலனும், காதலியும் கொலை செய்யப்படுவதுதான் ஆணவக்கொலையா என்றால், நெல்லையில் காதலுக்காக உறவுகளைக் கொன்ற சம்பவங்களும் நடந்துள்ளது.
திருநெல்வேலி தச்சநல்லூர் சங்கரநாராயணன் தலையாரி, அரசு வேலை செய்பவர். அவரது மகள் காவேரி, வண்ணாரப்பேட்டை விஸ்வநாதனைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். விஸ்வநாதன் ரயில்வே ஊழியர், மத்திய அரசுப் பணி. திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மகளைக் காணவில்லை என்று சங்கரநாராயணன் புகார் கொடுக்கிறார். திடீரென ஒருநாள் விஸ்வநாதன் வீட்டிற்கு தனது மகள் காவேரியைத் தேடிவந்த சங்கரநாராயணன் அங்கே மகள் இல்லாததால், 13.05.2016 அன்று காவேரியின் கணவர் விஸ்வநாதனின் தங்கை கல்பனாவை வெட்டிக் கொலை செய்து விடுகிறார். கல்பனா 32 வயது கர்ப்பிணி. ஆணவக்கொலை வழக்கில் காவேரியின் தந்தை சங்கரநாராயணன், தாய் செல்லம்மாள் இருவருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, மேல்முறையீட்டில் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. எட்டு ஆண்டுகள் சிறையில் இருந்த சங்கரபாண்டியன் பரோலில் வந்தபோது, 19.07.2025 அன்று ரயில் முன் பாய்ந்து விட்டார், சிகிச்சை பலனின்றி 24.07.2025 அன்று இறந்து விட்டார். விஸ்வநாதன் SC தேவேந்திர குல வேளாளர், காவேரி MBC மறவர் சாதியைச் சேர்ந்தவர்.
ஒரே சாதிதான், பொருளாதாரமும் ஒன்றுதான் ஆனாலும் குடும்ப பெருமைக்காக பெண்ணின் மேல் உள்ள ஆதிக்கத்தாலும் ஆணவக்கொலைகள் நடக்கின்றன.
தூத்துக்குடி மாநகரம் முருகேசன்நகர் மாரிசெல்வம் டிப்ளமோ முடித்துவிட்டு, ஷிப்பிங் கம்பெனியில் வேலை செய்தார். தனது வீட்டருகே குடியிருந்த கார்த்திகா என்ற பெண்ணை காதலித்து பதிவுத் திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த 3வது நாள் 02.11.2023 அன்று, மாரிசெல்வம், கார்த்திகா புதுமணத் தம்பதிகள் இருவரும் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். பெண்ணின் தந்தை முத்துராமலிங்கம் உள்ளிட்டோர் கைதானார்கள். மாரிசெல்வம், கார்த்திகா இருவருமே MBC மறவர் சாதியைச் சேர்ந்தவர்கள்.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே வீரப்பட்டி மாணிக்கராஜா, அவரது உறவுப் பெண் ரேஷ்மா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 25.07.2022 அன்று தனது வீட்டுக்கு வரவழைத்து மதிய விருந்தளித்துவிட்டு அன்று மாலையே படுகொலை செய்யப்பட்டனர். ரேஷ்மாவின் தந்தை முத்துக்குட்டி, தாய் மகாலட்சுமி இருவரும் கைதானார்கள். மாணிக்கராஜா, ரேஷ்மா இருவருமே SC ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர்கள்.
சங்கிலித்தொடர் கொலைகள் :
ஒரு ஆணவக்கொலை, குடும்ப பகையாக மாறி சங்கிலித் தொடர் கொலைகள் நடக்கின்ற அவலமும் நெல்லையில் இருக்கிறது.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி மறுகால்குறிச்சி நம்பிராஜன் தனது உறவுப் பெண் வான்மதியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பெண் வீட்டார் எதிர்ப்பால் வெளியூரில் வசித்து வந்த அவர்களை சமாதானம் பேசுவதற்காக அழைத்து, 26.11.2019 அன்று நெல்லை குறுக்குத்துறை ரயில்வே தண்டவாளத்தில் நம்பிராஜன் கொலை செய்யப்பட்டார். வான்மதியின் சகோதரர் செல்லச்சாமி, உறவினர்கள் செல்லத்துரை, முருகன் கைது செய்யப்பட்டனர். கைதான செல்லத்துரையின் தந்தை ஆறுமுகம், அவரது நண்பர் சுரேஷ் இருவரும் 14.03.2020 அன்று நாங்குநேரியில் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். இந்த இரட்டைக் கொலை வழக்கில் நம்பிராஜனின் சகோதரர் ராமையா, தாய் சண்முகத்தாய், சங்கர், இசக்கி ஆகியோர் கைதானார்கள். அவர்கள் ஜாமீனில் வந்த போது, 26.11.2020 அன்று மறுகால்குறிச்சி ஊருக்குள் முகமூடியுடன் இருசக்கர வாகனங்களில் வந்த கும்பல், நாட்டுவெடிகுண்டுகள் வீசி, நம்பிராஜன் சகோதரி சாந்தி, தாய் சண்முகத்தாய், இருவரின் தலைகளையும் துண்டித்து எடுத்துச் சென்றனர். ஒரு காதல் ஆணவக்கொலை, குடும்ப பகையாக மாறி கொலைகள் தொடர்கின்றன. நம்பிராஜன், வான்மதி இருவரும் MBC மறவர் சாதியைச் சேர்ந்தவர்கள்.
தீர்வுதான் என்ன?
இந்த ஆணவக்கொலைகள் அனைத்துமே பெண் வீட்டார்களால் நிகழ்த்தப்பட்டுள்ளது. இங்கே பெண் உடைமையாக, சொத்தாகப் பார்க்கப்படுகிறாள். தனது மகளை, தனது சகோதரியை தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆண் நினைக்கிறான். பெண்ணுக்கு சுயமாக முடிவெடுக்கின்ற அதிகாரம் கூடாதென்று ஆண் கருதுகிறான்.
அடுத்ததாக பெண் மானத்தோடு தொடர்புடையவள். ஒரு பெண் இன்னொரு ஆணுடன் பேசிப்பழகினாலே அது மானக்கேடு என்று குடும்பமே நினைக்கிறது.
மூன்றாவதாக ஆணாதிக்கம், குடும்ப ஆதிக்கத்தைத் தாண்டி சாதி ஆதிக்கம் மேலோங்கி நிற்கிறது. இந்தியாவின் சாதியக் கட்டமைப்பும், சாதியப் படிநிலையும் சிலரை மேல் என்றும், சிலரைக் கீழ் என்றும் வகைப்படுத்தி வைத்துள்ளதால், சாதி வெறி ஆழமாக வேரூன்றி இருக்கிறது. ஒரே பட்டியலில் (MBC, SC, BC) உள்ள சாதியாக இருந்தாலும், சாதியப் படிநிலைகளைப் பிரித்துப் பார்த்து பெண் வீட்டார்கள் ஆணவக் கொலைகளை நிகழ்த்துகிறார்கள். பெரும்பாலான கொலைகள் சாதிய ஆணவக் கொலைகளாகவே இருக்கின்றன.
சாதி வெறியை ஊட்டி வளர்க்கும் இடத்தில் சமூக ஊடகங்கள் முதலிடத்தில் உள்ளன. சமூக அமைதியை உருவாக்க வேண்டிய பள்ளி ஆசிரியர்களும், காவலர்கள், காவல்துறை அதிகாரிகளும் சாதிய கறைபட்டுப் போய் இருக்கிறார்கள். சாதிப்பாசத்தோடு வெறுப்புணர்வை ஊட்டி வளர்க்கிறார்கள் அல்லது கண்டும் காணாமல் கடந்து போகிறார்கள்.
சமூகத்தில் நல்லிணக்கத்தை உருவாக்கவேண்டிய கிராம அமைப்புகள் சாதித் தலைவர்களின் படங்களையும், சாதிய அடையாளங்களையும் தூக்கிப் பிடிக்கின்ற வகையில், போஸ்டர்கள், பேனர்கள் வைத்து திருவிழாக்களை நடத்துகிறார்கள். சுதந்திரப் போராட்ட வீரர்கள் சாதியத் தலைவர்களாக மாறிவிட்டார்கள். குற்றப்பின்னணி கொண்ட நபர்களும், சிறை சென்ற ரவுடிகளும் சாதியத் தலைவர்களாக வலம் வருகிறார்கள். அவர்களை இளஞ் சிறார்கள் ஹீரோக்களாகப் பார்க்கிறார்கள். தேர்தல் கால உதவிக்காக அரசியல்வாதிகளும் சாதி ரவுடிகளை வளர்த்து விடுகிறார்கள்.
சாதிப் பாசத்துடன் செயல்படும் காவல்துறையும், உளவுத்துறையும் மாற்றுசாதியினரை காட்டிக்கொடுக்கவும், சுயசாதிப்பற்றுடன் தன் சாதியைப் பாதுகாக்கவும் முன்னின்று செயல்படுவதால் சட்டத்தின் ஆட்சிக்கு இடமில்லாமல் போய்விட்டது.
பள்ளிகளிலும், பொதுவெளிகளிலும் நீதிபோதனைகளும், சமூக சிந்தனைகளும் வளர்த்தெடுக்கப்பட வேண்டும். பொதுவெளிகளில் சாதிய அடையாளங்களை ஒழிக்க வேண்டும். சாதியின் பெயரால் பெருகிவரும் பெருங்கூட்ட விழாக்களை, குருபூஜை, நினைவஞ்சலி நிகழ்ச்சிகளை தடை செய்ய வேண்டும். சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு மரியாதை செய்கின்ற இடத்தில் கொடிகள், தோரணங்கள், ஊர்வலங்கள், சாதிய அடையாளங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும். தேர்தல் அரசியலில் இவையெல்லாம் சாத்தியப்பட்டால் சாதியின் பெயரால் நடக்கின்ற வெறுப்புணர்வும் மட்டுப்படுத்தப்படலாம்.