ADVERTISEMENT

சாதிப் பேரணிகளைத் தடை செய்வதால் சாதியற்ற சமுதாயம் உருவாகிவிடுமா?

Published On:

| By Minnambalam Desk

சாதியற்ற சமுதாயம் என்பது உன்னதமான கொள்கை. ஆனால், வெறும் சாதியச் சின்னங்களைத் தடை செய்வதன் மூலம் நாம் சாதியைச் சட்டத்தால் நீக்கிவிட முடியாது; அதற்கு வலு சேர்க்கும் ஏற்றத்தாழ்வு அமைப்புகளை நாம் தகர்த்தெறிய வேண்டும்.

மகேந்திர குமார் சிங்

உத்தரப் பிரதேச அரசு, சாதி அடிப்படையிலான அரசியல் பேரணிகளையும் பொது இடங்களில் சாதிச் சின்னங்களைக் காண்பிப்பதையும் தடை செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இது “பொது அமைதி”, “தேசிய ஒற்றுமைக்கு” அச்சுறுத்தல் என்று கூறியுள்ளது. மேற்பரப்பில் பார்த்தால், அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவால் உந்தப்பட்ட யோகி ஆதித்யநாத் அரசின் இந்த நடவடிக்கை, சாதியற்ற இந்தியாவை உருவாக்கும் துணிச்சலான, முற்போக்கான நடவடிக்கையாகத் தோன்றுகிறது.

ADVERTISEMENT

பிறப்பு ஒருவரின் சமூக அல்லது அரசியல் விதியை முன்கூட்டியே தீர்மானிக்காத சூழலை உருவாக்குவதற்கான நடவடிக்கையாகவும் இது தோன்றக்கூடும். இந்த உத்தரவு சாதி அடையாளத்தின் மிகத் தெளிவான சின்னங்களை இலக்காகக் கொண்டுள்ளது: பிரிவினைவாதப் பேரணிகள், பக்கச்சார்பான காவல்துறைப் பதிவுகள், வாகனங்களில் ஒட்டப்பட்ட சாதி ஸ்டிக்கர்கள்.

சாதி அடிப்படையிலான அரசியல் பேரணிகளைத் தடை செய்வதற்கான இந்த யோசனை மிகக் கடுமையான விவாதங்களைத் தூண்டும். இந்தத் தடையின் நோக்கம் ஒரு அளவிற்குப் பாராட்டத்தக்கது. மோசமான சாதிக் கணக்கீடுகளுக்குத் தள்ளப்பட்ட தேர்தல் அரசியல், ஜனநாயகத்தின் மதிப்பைக் குறைத்து, சமூக பதற்றத்தைத் தூண்டுகிறது.

ADVERTISEMENT

அரசியல் கட்சிகள், குறிப்பாக சாதி அணிதிரட்டலை நம்பியிருக்கும் தலைவர்கள், பெரும்பாலும் வம்சாவளி குடும்ப நிறுவனங்களாக மாறி, குடிமக்களை வெறும் வாக்காளர்களாகவும், அடையாளங்களை அரசியல் கோஷங்களாகவும் மாற்றியுள்ளனர்.

சாதிய அரசியலும் சமத்துவ, சமூக நீதியும்

ADVERTISEMENT

இருப்பினும், இந்தத்  தடையைத் தெளிவான வெற்றியாகப் புகழ்வது தவறானது. உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் செயல்படுத்தப்பட்ட இந்தக் கொள்கை இருமுனைகளிலும் கூராக இருக்கும் வாள் போன்றது. இதன் உண்மையான தாக்கம் அதன் வார்த்தைகளில் அல்ல, அதன் அமலாக்கத்தில்தான் உள்ளது. ஒடுக்கப்பட்ட சாதிகளால் நடத்தப்படும் சமூக நீதிக்கான நியாயமான போராட்டங்களை இது நசுக்காமல்  இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

அரசியல் அணி திரட்டலுக்குச் சாதி   இரண்டு மாறுபட்ட வழிகளில் பயன்படுத்தப்படலாம். ஒன்று சமூகப் படிநிலையை வலுப்படுத்த முயல்கிறது. அங்கு சலுகை பெற்ற குழுக்கள் தங்கள் தற்போதைய ஆதிக்கத்தை உறுதிப்படுத்தச் சாதி அடையாளத்தைப் பயன்படுத்துகின்றன. மற்றொன்று, தேவையிலிருந்தும் போராட்டத்திலிருந்தும் உருவானது. இது சமூக விடுதலைக்கான ஒரு கருவியாகும்.

ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு – தலித்துகள், ஆதிவாசிகள், ஓபிசிகள் – இது அதிகாரத்தைப் பெறுவது பற்றியது அல்ல, மாறாகத் தங்கள் குரலைப் பிறர் கேட்கச்செய்வது, வரலாற்று அநீதிகளைச் சரிசெய்வது, அரசியலமைப்பு அவர்களுக்கு உத்தரவாதம் அளிக்கும் உரிமைகளை அணுகுவது ஆகியவை பற்றியது.

இந்த உத்தரவின் மிகப்பெரிய ஆபத்து என்னவென்றால், இந்த இரண்டையும் – ஆதிக்கச் சாதியினரின் அணி திரட்டலையும் ஒடுக்கப்பட்ட சாதியினரின் உரிமைக்குரலையும் – ஒன்றாகக் குழப்பி, ஒடுக்குபவர்களின் பெருமையையும் ஒடுக்கப்பட்டவர்களின் போராட்டத்தையும் “பொது இடையூறாக” கருதுவதாகும். இது தத்துவார்த்தக் கவலை மட்டுமல்ல. மாநிலத் தேர்தல்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதற்கான நேரமும் இதை மேலும் சிக்கலாக்குகிறது.

அரசு இதைச் சமூக நல்லிணக்கத்திற்கான ஒரு நடவடிக்கையாக முன்வைத்தாலும், அதன் அரசியல் தாக்கங்களைப் புறக்கணிக்க முடியாது. ‘மக்கள் தொகைக்கு ஏற்ற அளவில் உரிமைகள்’ என்ற கொள்கையின் அடிப்படையில் ஓபிசிகள், எஸ்சிகள், எஸ்டிகளுக்கு உரிமைகளையும் பிரதிநிதித்துவத்தையும் கோரும் கட்சிகள் உருவானதால், மண்டல் கமிஷனுக்குப் பின் இந்தியாவின் சிக்கலான அரசியலில் அடையாள அரசியல் ஆழமாக வேரூன்றியது. இந்தக் கோரிக்கைகள், சமீபத்தில் காங்கிரஸால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, சாதியை தேசிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் சேர்க்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தன.

உத்தரப் பிரதேசத்தில் சாதி தவிர்க்க முடியாத சமூக யதார்த்தம். அரசியல் அணி திரட்டலுக்காகச் சாதியைப் பயன்படுத்துவது அங்கே பொதுவான அம்சம். இது சாதி அடையாளத்தை வெளிப்படையாகக் கொண்ட கட்சிகளிலிருந்து – ஓபிசி மற்றும் சிறுபான்மையினருக்கான சமாஜ்வாதி கட்சி, தலித்துகளுக்கான பகுஜன் சமாஜ் கட்சி அல்லது சுஹல்தேவ்  பாரதிய  சமாஜ் கட்சி, நிஷாத் கட்சி, அப்னா தல் (எஸ்) போன்ற ஒற்றைச் சாதிக் கட்சிகள்  வரை பரவுகிறது.

அதேபோல், பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ் போன்ற தேசியக் கட்சிகளும், தேர்தல் வெற்றிகளுக்காகப் பிராமண, ராஜபுத்திர, பனியா போன்ற சாதி  சார்ந்த மாநாடுகளையும் ஓபிசி பிரிவினரை அணுகுவதற்கான வழிமுறைகளையும் நுட்பமாக ஏற்பாடு செய்கின்றன.

மாற்று வழிகள் எங்கே?

எஸ்சி/எஸ்டி (அட்டூழியங்கள் தடுப்பு) சட்டத்தின் கீழ் உள்ள வழக்குகளுக்கு இந்த உத்தரவில் விதிவிலக்கு வழங்கப்பட்டுள்ளது. இது அவசியமானது; ஆனால் போதுமானதல்ல. சாதி ரீதியான அநீதியைச் சரிசெய்யச் சட்ட அமைப்பில் சாதி தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதை இது ஒப்புக்கொள்கிறது. சமூக நீதியின் நோக்கம் நீதிமன்றத்திற்கு அப்பாற்பட்டது. பல தசாப்தங்களாக, அரசியல் பேரணிகளும்  மாநாடுகளும்  ஒடுக்கப்பட்ட சமூகங்கள் ஒன்றுகூடித் தங்களின் இருப்பை நிலைநிறுத்திக் கொள்ளவும், அதிகாரத்தைக் கேள்வி கேட்கவும் கிடைத்த சில தளங்களில் ஒன்றாகும். தங்கள் உரிமைகளை முன்வைத்து வாதாடுவதற்கான மாற்று வழிகளை உருவாக்காமல் இந்தத் தளத்தை அகற்றுவது, பாதிக்கப்படக் கூடியவர்களை  நிராயுதபாணியாக்குவதாக அமையும்.

பாரபட்சமற்ற முறையில் அமலாக்குவதே இந்த உத்தரவுக்கான பெரிய சவாலாக இருக்கும். ஒரு ஆதிக்கச் சாதி தன் பலத்தைக் காண்பிப்பதையும், ஒரு தலித் குழு அட்டூழியங்களுக்கு எதிராகப் போராடுவதையும் சமமாகப் பாவித்து அரசு இந்தத் தடையை அமல்படுத்துமா? வரலாறு இது சாத்தியமில்லை என்று கூறுகிறது.

மேலும், பெரும்பாலான  காவல்துறைப் பதிவுகளிலிருந்து சாதியை நீக்குவது -நல்ல நோக்கம் கொண்டதாக இருந்தாலும் – சாதிப் பாகுபாட்டைக் கண்ணுக்குத் தெரியாததாக மாற்றக்கூடும்.

எஸ்சி/எஸ்டி சட்டம் தொடர்பான வழக்குகளைத் தவிர்த்து, பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் சாதி பற்றிய தரவுகள் இல்லாமல், சாதி வன்முறை அல்லது அமைப்புசார்ந்த பக்கசார்பு ஆகியவற்றின் வடிவங்களை நாம்  எப்படி  அனுபவ ரீதியாகக்  கண்காணிக்க முடியும்? தரவுகள் பிரிவினைக்கான கருவி அல்ல, மாறாக சாதியத்தின் நோயைக் கண்டறியும் கருவி. இதில் அடையாளங்களை நீக்குவது பெரும்பாலும் பாதிக்கப்பட்டவருக்குப் பதிலாக குற்றவாளிக்கே நன்மை பயக்கக்கூடியதாக இருக்கும்.

எனவே, இந்தக் கொள்கையின் உண்மையான வெற்றி, சாதிப் பேச்சு இல்லாத மேலோட்டமான அமைதியான தேர்தலை வைத்துத் தீர்மானிக்கப்படாது. அரசு இந்தத் தடையைப் பின்வரும் உறுதியான நீதிச் செயல்களுடன் இணைக்கிறதா என்பதைப் பொறுத்தே இதன் உண்மையான வெற்றி இருக்கும்: பின்தங்கிய சாதியினரின் பொருளாதார, கல்வி வளர்ச்சியை விரைவுபடுத்துதல், எஸ்சி/எஸ்டி சட்டத்தைக் கடுமையாக அமல்படுத்துதல், குறைகளைத் தீர்க்கப் புதிய மன்றங்களை உருவாக்குதல், அரசியல் கட்சிகளை அடையாள அடிப்படையில் போட்டியிடாமல், ஆளுகை, வேலைவாய்ப்பு, சுகாதாரம், கல்வி ஆகியவற்றின் அடிப்படையில் போட்டியிட வற்புறுத்துதல்.

சாதியற்ற சமுதாயம் என்பது உன்னதமான கொள்கை. ஆனால், வெறும் சாதியச் சின்னங்களைத் தடை செய்வதன் மூலம் நாம் சாதியைச் சட்டத்தால் நீக்கிவிட முடியாது, அதற்கு வலு சேர்க்கும் ஏற்றத்தாழ்வு அமைப்புகளை நாம் தகர்த்தெறிய வேண்டும். உ.பி.யின் இந்தத் தடை சாதிப் பெருமையின் மிக மோசமான வெளிப்பாடுகளைக் கட்டுப்படுத்தலாம். ஆனால், நுட்பமான புரிதல் இல்லாமல், அது ஒடுக்கப்பட்டவர்களின் அமைதியை முன்னேற்றமாகக் கருதி, அநீதியான தற்போதைய நிலையைப் பாதுகாக்கும் கருவியாக மாறக்கூடும்.

மகேந்திர குமார் சிங், டிடியு கோரக்பூர் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் கற்பிக்கிறார்.

நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share