அமைச்சர் நேரு மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்ய கோரிய வழக்கு : அரசு, டிஜிபி பதிலளிக்க உத்தரவு!

Published On:

| By Kavi

நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கு எதிராக அதிமுக எம்பி இன்பதுரை தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி தமிழக அரசு, டிஜிபி, லஞ்ச ஒழிப்புத்துறை ஆகியோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேரு துறையில் வேலைவாய்ப்பு நியமனத்தில் ஊழல் நடந்திருப்பதாகவும், ஒப்பந்தங்கள் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்திருப்பதாகவும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டி தமிழக டிஜிபிக்கு அடுத்தடுத்து கடிதம் அனுப்பியது.

ADVERTISEMENT

இந்த நிலையில் கே.என்.நேருவுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் 2 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

நகராட்சி நிர்வாகத் துறையில் ஒப்பந்தங்கள் ஒதுக்கீட்டில் 1020 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக குற்றம்சாட்டி அவர் மீது வழக்குப்பதிவு செய்ய அமலாக்கத் துறை தமிழக டிஜிபிக்கு அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட வேண்டும் என்று அதிமுக எம்.பி இன்பதுரை சென்னை உயர் நதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

ADVERTISEMENT

அதுபோன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வளங்கள் துறை பணியிடங்களை நிரப்புவதில், 634 கோடி ரூபாய் லஞ்சம் பெறப்பட்டுள்ளதாக கூறி அமலாக்கத்துறை அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்ய தமிழக டிஜிபிக்கு உத்தரவிட வேண்டும் என்று மதுரையைச் சேர்ந்த ஆதிநாராயணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த இரண்டு மனுக்களும் தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீ வஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில்  இன்று (ஜனவரி 28) விசாரணைக்கு வந்தது.

ADVERTISEMENT

இந்த விசாரணையின் போது நீதிபதிகள், அமலாக்கத்துறை அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் டிஜிபி நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அவ்வாறு செயல்படாதது ஏன் ?என்று கேள்வி எழுப்பினார்.

இந்த சூழலில் ஆதிநாராயணன் வழக்கில் தமிழக அரசு சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

அமலாக்கத்துறை அனுப்பிய கடிதத்தை அரசுக்கு டிஜிபி அனுப்பி வைத்தார். இது தொடர்பாக விரிவாக விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனருக்கு அனுமதி வழங்கப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது.

விசாரணையை முடிக்க 180 நாட்கள் அவகாசம் உள்ளது.  இந்த விவகாரத்தில் நேரடியாக வழக்குப்பதிவு செய்ய வாய்ப்பு இலலை’ என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அட்வகேட் ஜெனரல் பி.எஸ் ராமன் ஆஜராகி, ‘மனுதாரர் ஆதிநாராயணன் மீது ஆறு கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் உட்பட 25 வழக்குகள் உள்ளன’ என்று நீதிபதிகளிடம் தெரிவித்தார்.

மேலும் அவர்,  “மனுதாரர்களில் இன்னொருவர் அரசியல்வாதி என்று தெரிவித்த போது, ‘அரசியல்வாதிகள் வழக்கு தொடரக்கூடாதா? மக்கள் பிரதிநிதிகள் கூட பொதுநல வழக்குகள் தொடர்ந்திருக்கிறார்கள்’ என்ற தலைமை நீதிபதி சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ரமேஷ், ‘டிஜிபிக்கு தகவல் மட்டும் அனுப்பி வைக்கவில்லை. ஆதாரங்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. எனவே ஆரம்பகட்ட விசாரணை இல்லாமல் நேரடியாக வழக்கு பதிவு செய்து மேல் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது’ என்றார்.

தமிழக டிஜிபி சார்பில் மூத்த வழக்கறிஞர் விக்ரம் கபூர் சவுத்ரி ஆஜராகி, ‘ இந்த மனுவை தாக்கல் செய்ய மனுதாரருக்கு அடிப்படை உரிமை இல்லை. இருவரின் நன்பத்தன்மையை ஆராய வேண்டும். எந்த வழக்கின் சோதனையில் ஆதாரங்கள் கிடைத்ததாக அமலாக்கத்துறை கூறுகிறதோ, அந்த வழக்கு ரத்து செய்யப்பட்டு விட்டது” என்று தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள், இன்பதுரை தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்க தமிழக அரசு டிஜிபி லஞ்ச ஒழிப்புத்துறை ஆகியோருக்கு உத்தரவிட்டனர்.

மேலும் அரசின் பதிலுக்கு பதில் அளிக்கும்படி ஆதிநாராயணன் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் இரு வழக்கு விசாரணையையும் பிப்ரவரி 4ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share