அண்ணா பல்கலை கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கல்லூரிகளுக்கு முறைகேடாக அங்கீகாரம் வழங்கிய குற்றச்சாட்டில் பல்கலைக்கழக அதிகாரிகள் உள்ளிட்ட 17 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் சுமார் 480 கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் கடந்த 2023-24ம் கல்வியாண்டில் தமிழ்நாட்டில் உள்ள 224 கல்லுரிகளில் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து விசாரணை நடந்து பெற்று வந்தது.
விசாரணையில் 224 தனியார் சுயநிதி கல்லூரிகளில் 353 பேராசிரியர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் ஒரே நேரத்தில் பணிபுரிவதாக போலி கணக்கு காட்டப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. மேலும் கல்லூரியில் உட்கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்யாமலேயே அவற்றிற்கு அங்கீகாரம் வழங்கியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த முறைகேடுகள் தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை இயக்குநர்கள், சித்ரா, சீலோ எலிசபெத், முன்னாள் பதிவாளர் ரவிக்குமார், தற்போதைய பொறுப்பு பதிவாளர் பிரகாஷ் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும் காஞ்சிபுரத்தில் உள்ள மாதா பொறியியல் கல்லூரி, கோவையில் உள்ள கதிர் பொறியியல் கல்லூரி மற்றும் திருவள்ளூரில் உள்ள வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரி நிர்வாகிகள் உள்ளிட்ட 17 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டின் பெருமை மிகு அடையாளங்களில் ஒன்று, சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழகத்தின் கீழ் 480-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன.
ஆதார் எண்ணை தவறாக பயன்படுத்தி பேராசிரியர்கள் பலர், முறைகேடாக 2 கல்லூரிகளில் பணியாற்றிய தகவல் வெளியாகி சர்ச்சையானது. இந்த முறைகேட்டில் 800 பேர் வரை ஈடுபட்டுள்ளதாக கூறப்பட்டது. இதுதொடர்பாக விசாரிக்க 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அதில் 353 ஆசிரியர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பணியாற்றி மோசடியில் ஈடுபட்டது கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.
இந்நிலையில் இந்த மோசடிக்கு காரணமான அண்ணா பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர்கள் இரண்டு பேர், மூன்று பேராசிரியர்கள் உட்பட 10 பேர் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் (DVAC) வழக்குப் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பொறியியல் படிப்பு என்பது ஏழை, நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் கனவு. அந்தக் கனவை நனவாக்க அண்ணா பல்கலைக்கழகமும், தமிழ்நாடு அரசும் உறுதுணையாக இருக்க வேண்டுமே தவிர, மோசடிகளுக்கு துணை நின்று மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட காரணமாக இருக்கக் கூடாது.
எனவே, அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பேராசிரியர்களாக பணியாற்றியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களுக்கு உறுதுணையாக இருந்த அதிகாரிகள், மற்றும் அதற்கு காரணமானவர்கள் எந்த உயர் பதவியில் இருந்தாலும் அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் இனி இது போன்ற மோசடிகள் நடக்காதவாறு அரசு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.”இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
