பாலியல் புகாரில் தவெக வேட்பாளர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு

Published On:

| By Pandeeswari Gurusamy

TVK

தமிழக வெற்றிக் கழகத்தின் பூந்தமல்லி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிரகாசம் என்ற குட்டி மீது பாலியல் சீண்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மார்ச் 29-ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தார். நேற்று பெரம்பூரில் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்து பிரச்சாரத்தை தொடங்கி உள்ளார். இந்நிலையில், பூந்தமல்லி தொகுதிக்கு தவெக நிர்வாகியான பிரகாசம் என்ற குட்டியை வேட்பாளராக அறிவித்திருந்தார்.

ADVERTISEMENT

முன்னதாக திருவள்ளூர் தெற்கு மாவட்ட தவெக செயலாளராக இருந்து வந்த பிரகாசம் என்ற குட்டி, கடந்த ஜூன் மாதம் திருவாரூரில் நடைபெற்ற ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் தவெக மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட பல தவெக நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

அந்த நிகழ்ச்சியின் போது, பிரகாசம் என்ற குட்டி தவெக பெண் நிர்வாகி ஒருவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து அந்தப் பெண் நிர்வாகி, கட்சியின் தலைமைக்கு புகார் அளித்திருந்தார். ஆனால் ஆறு மாதங்கள் கடந்தும், கட்சித் தரப்பில் பிரகாசம் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

ADVERTISEMENT

இந்நிலையில், நேற்று திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட தவெக பெண் நிர்வாகி தனது கணவருடன் சென்று புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் திருவள்ளூர் நகர காவல் துறை விசாரணை மேற்கொண்டு, பிரகாசம் என்ற குட்டி மீது பாலியல் சீண்டல் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது.

தவெகவில் சீட் ஒதுக்கப்பட்டுள்ள பலர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. குறிப்பாக விஜய் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று தொடர்ந்து தனது கூட்டங்களில் பேசி வரும் நிலையில், தற்போது வேட்பாளர் ஒருவர் மீது பாலியல் சீண்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share