மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கியவாறு பயணம் மேற்கொண்டால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சீர்த்திருத்த பள்ளியில் சேர்க்க நேரிடும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை எச்சரித்துள்ளது. Case registered against students
திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், “மாணவர்களின் நலன் கருதி பள்ளி நேரத்தின் போது கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார்.
இந்த மனு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் மரியா கிளாட் அமர்வில் இன்று (ஜூன் 27) விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் சார்பில், ”மாணவர்கள் படிகட்டுகளில் தொங்கிக் கொண்டு பயணிப்பதை தடுக்க சிறப்பு பேருந்துகளை இயக்க உத்தரவிட வேண்டும்” என்று வாதிடப்பட்டது.
இதை கேட்ட நீதிபதிகள், “மனுதாரர்கள் சொல்வது நடைமுறைக்கு மாறாக இருக்கிறது. பேருந்துகளில் இருக்கைகள் இருந்தாலும் தொங்கிக் கொண்டு பயணிப்பதை தான் மாணவர்கள் விரும்புகின்றனர்.
ஓட்டுநர்கள், நடத்துநர்கள் எச்சரித்தும் மாணவர்கள் கேட்பதில்லை. சென்னை போன்ற நகரங்களில் மாணவர்கள் பேருந்து மேற்கூரைகளில் ஏறி மோதலில் ஈடுபடுகின்றனர்.
நடத்துநர்களையும் தாக்குகின்றனர். படிக்கட்டுகளில் பயணம் செய்வது தொடர்பாக ஏராளமான குற்றச்சாட்டுகள் எழுகின்றன.
பள்ளியிலேயே புகைப்பழக்கம், கஞ்சா பழக்கங்கள் மாணவர்களிடையே அதிகரித்து வருகிறது.
மாணவிகள் பள்ளிகளில் காவல்துறை பாதுகாப்பு வழங்கும் அளவிற்கு நிலைமை உள்ளது.
பிள்ளைகளுக்கு சரியான அறிவுரைகளை வழங்கி வளர்ப்பது பெற்றோர்களின் கடமை.
பேருந்துகளில் நடத்துனர் அறிவுறுத்தியும் மாணவர்கள் ஏற்பதில்லை. படிக்கட்டுகளில் பயணிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.
அவ்வாறு படிக்கட்டுகளில் பயணிக்கும் மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்க உத்தரவிட நேரிடும்.
அதேபோன்று மாணவர்கள் பேருந்துக்குள் இருப்பதை உறுதிப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி நேரத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்குவதை உறுதி செய்ய வேண்டும்” என்று நீதிபதிகள் அறிவுறுத்தினர்.Case registered against students