கோவையில் புதிதாக கட்டப்பட்ட ஜிடி நாயுடு மேம்பாலத்தில் உரிய அனுமதியின்றி ஒன்று கூடி மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி உள்ளிட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மீது ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கோவை மக்களின் நீண்டகால கனவான ஜிடி நாயுடு மேம்பால பணிகள் முடிந்த நிலையில் நேற்று தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். கோவையின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் நோக்கில் கடந்த அதிமுக ஆட்சியில் 2020ம் ஆண்டு பாலம் கட்டும் பணிகள் தொடங்கியது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் பணிகள் நிறைவடைந்து நேற்று பாலம் திறக்கப்பட்டது.
இந்நிலையில் அதிமுக ஆட்சிகாலத்தில் பணிகள் தொடங்கப்பட்ட மேம்பாலம் பாலம் என்பதால் இன்று (அக்டோபர் 10) இன்று அதிமுகவினர் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி தலைமையில் தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் அர்ஜூனன், கே.ஆர்.ஜெயராமன், கிணத்துக்கடவு தாமோதரன் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் பாலம் தொடங்கும் உப்பிலிபாளையம் பகுதியில் திரண்டனர்.
மேளதாளங்கள் முழங்க பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். மேலும் ஏராளமான கார் மற்றும் இரு சக்கர வாகனங்களில் 10 கி.மீ தூரம் வரை சென்றனர். இந்த கொண்டாட்டங்களால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்நிலையில் அதிமுகவினர் உரிய அனுமதி இன்றி புதிய உயர்மட்ட மேம்பாலம் பகுதியில் பேப்பர் ஸ்பிரே மற்றும் மேளதாளங்கள் அடித்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதற்காகவும் எஸ்.பி வேலுமணி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 400க்கும் மேற்பட்டோர் மீது ரேஸ்கோஸ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணையை தொடக்கி உள்ளனர்.