திருமங்கலம் அருகே அரசு மாணவர் விடுதியில் சக மாணவனை நிர்வாணப்படுத்தி தாக்குதல் நடத்தி உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள செக்கானூரணி பகுதியில் அரசு கள்ளர் மாணவர் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் அரசு கல்லூரியில் பயிலும் மாணவர்கள் அரசு தொழிற்பயிற்சி நிறுவனம் (ITI)பள்ளியில் பயிலும் மாணவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்கி பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில் பள்ளியில் படிக்க இயலாமல் வகுப்பை நிறுத்திய மாணவர்கள் சிலரை செக்கானூரணி அரசு தொழிற்பயிற்சி நிறுவனத்தில் கடந்த 11ஆம் தேதி புதிதாக தொழில்நுட்ப பயிற்சி நிறுவன முதல்வர் சேர்த்துள்ளார்.
அந்த வகையில் கள்ளிக்குடி அருகே உள்ள வில்லூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவர்,தேனி மாவட்டம் மயிலாடும்பாறை,கோட்டூர் பகுதியை சேர்ந்த மாணவர்கள் மூவர்,மதுரை அச்சம்பத்து பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் தொழிற்பயிற்சி நிறுவன முதல்வர் பரிந்துரையின் பேரில் செக்கானூரணி அரசு மாணவர் விடுதியில் உள்ள ஒரே அறையில் தங்கி படிப்பை தொடர்ந்தனர்.
இந்த நிலையல் சில தினங்களுக்கு முன் மாணவர்களில் ஒருவரை சக மாணவர்கள் நிர்வாணப்படுத்தி கேலி செய்து அடிப்பதை அறையில் இருந்த மாணவன் தனது செல்போனில் பதிவிட்டு அதை பாதிக்கப்பட்ட மாணவன் தந்தையிடம் காட்டியதாக கூறப்படுகிறது. மேலும் இந்த வீடியோ சமூக வலைதளங்களிலும் வைரலானது.
இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை செக்கானூரணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் செக்கானூரணி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் பாதிக்கப்பட்ட மாணவனை சக மாணவர்கள் அவரது ஆடையை கழற்றி நிர்வாணப்படுத்தி ராக்கிங் செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மாணவனை தாக்கி ராக்கிங்கில் ஈடுபட்ட நான்கு சிறார்கள் மீது ராக்கிங் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் கவனக்குறைவாக செயல்பட்டதாக கூறி விடுதி பாதுகாவலர் பாலமுருகனை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்தனர். மேலும் தற்காலிகமாக சுபாகரன் என்பவர் விடுதி பொறுப்பு பாதுகாவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.