ஜெயலலிதாவுக்கு எதிரான வருமான வரி வழக்கில், வரி பாக்கிகளை வசூலிக்கும் நடவடிக்கையை நிறுத்தி வைக்க சென்னை உயர் நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா செலுத்த வேண்டிய சுமார் 36 கோடி ரூபாய் வரி பாக்கியை வசூலிக்கும் வகையில், ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசாக அறிவிக்கப்பட்ட ஜெ. தீபாவுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இந்த நோட்டீஸை எதிர்த்து ஜெ.தீபா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில் தீபாவின் சகோதரரான தீபக்கும் சேர்க்கப்பட்டார்.
கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது தீபா தரப்பில், “வருமான வரி பாக்கியை பொறுத்தவரை முதலில் 36 கோடி ரூபாய் என்று வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. அதன் பிறகு 13 கோடி ரூபாய் என்று ஒரு நோட்டீஸ் கிடைத்தது. சரியான தொகையை தெரிவித்தால் அந்த தொகையை செலுத்த தயார்” என்று வாதிடப்பட்டது.
இதையடுத்து வரி பாக்கி குறித்து விரிவான பதில் மனு தாக்கல் செய்யும்படி வருமான வரித்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் இவ்வழக்கு மீண்டும் இன்று (ஜனவரி 21) நீதிபதி சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது வருமான வரித்துறை சார்பில் இதுவரை பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை என்று ஜெ.தீபா சார்பில் நீதிபதியிடம் தெரிவிக்கப்பட்டது.
இதை விசாரித்த நீதிபதி சரவணன், வருமான வரி பாக்கி குறித்து 2 வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என வருமான வரித்துறைக்கு உத்தரவிட்டார்.
அதுவரை வரி பாக்கி வசூல் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும் உத்தரவில் தெரிவித்துள்ளார்.
