டெல்லியில் கார் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்த போது, தற்கொலைப் படை தாக்குதல் நடத்தவும் சதித் திட்ட்டம் தீட்டப்பட்டிருந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
டெல்லி செங்கோட்டை அருகே நேற்று இரவு 7 மணிக்கு கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. டெல்லியின் பரபரப்பான செங்கோட்டை பகுதியில் நிகழ்ந்த இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 10 பேர் பலியாகினர்; 24 பேர் படுகாயமடைந்தனர். இக்குண்டு வெடிப்பு சம்பவத்தின் போது 14 வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன.
நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய டெல்லி குண்டு வெடிப்பு சம்பவ இடத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக அனைத்து விசாரணை அமைப்புகளும் விசாரித்து வருகின்றன.
இந்த விசாரணையின் போது, ஜம்மு காஷ்மீர் பயங்கரவாதிகளே டெல்லி தாக்குதலுக்கு காரணம் என தெரிய வந்துள்ளது. கடந்த சில வாரங்களாக உ.பி, டெல்லி, ஹரியானாவில் கைப்பற்ற சுமார் 2,500 கிலோ அம்மோனியம் நைட்ரேட் வெடிமருந்து கைப்பற்றப்பட்டது. மேலும் 2 ஜம்மு காஷ்மீர் மருத்துவர்கள் கைது செய்யப்பட்டனர். டெல்லியில் பெரும் தாக்குதல் நடத்த இவர்கள் சதித் திட்டம் தீட்டி இருந்தது தெரியவந்தது.
மேலும் டெல்லியில் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தவும் சதித் திட்டம் தீட்டப்பட்டதாகவும் விசாரணை அமைப்புகள் தெரிவிக்கின்றன.
டெல்லியில் வெடித்து சிதறிய காரின் உரிமையாளர் ஜம்மு காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தைச் சேர்ந்தவர்; அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. கார் குண்டு வெடிப்பைத் தொடர்ந்து தலைநகர் டெல்லி உட்பட நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களிலும் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் முக்கிய இடங்களில் வாகன சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
