மத்திய அரசு அறிவித்துள்ள ஜிஎஸ்டி வரி மாற்றத்தால் ஹூண்டாய் க்ரெட்டா, மஹிந்திரா ஸ்கார்பியோ-என் மற்றும் டாடா சஃபாரி உள்ளிட்ட கார்களின் விலை கணிசமாக குறைந்துள்ளது.
இந்தியாவில் ஆட்சிக்கு வந்த மத்திய பாஜக அரசு நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரியை கடந்த 2017ஆம் ஆண்டு அமல்படுத்தியது. அதன்படி 5%, 12%, 18% மற்றும் 28% என நான்கு வரி விகித அடுக்குகளில் பொருட்கள் விற்கப்பட்டு வந்தன.
இந்த நிலையில் வரும் 22ஆம் தேதி முதல் 12% மற்றும் 28% அடுக்குகள் நீக்கப்பட்டு, அவை 5% மற்றும் 18% வரி விகிதங்களுக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளன. மேலும் சிகரெட், பான் மசாலா, கூல் டிரிங்ஸ் போன்ற உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களுக்கும், ஜெட் விமானம், விலையுயர்ந்த கார்கள் ஆடம்பர வகைப் பொருட்களுக்கும் வரி விகிதம் 40 சதவீதமாக நிர்ணயித்துள்ளது ஜிஎஸ்டி கவுன்சில்.
இந்த அறிவிப்பை ஆளும் கூட்டணி கட்சிகள் மட்டுமின்றி, எதிர்க்கட்சியினரும் வரவேற்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கார், பைக் பிரியர்களுக்கு மகிழ்ச்சியளிக்கு விதமாக புதிய ஜிஎஸ்டி வரி மாற்றத்தால் என்ன நிகழ்ந்துள்ளது என்பதை இங்கு காணலாம்.
5% வரி!
மின்சார வாகனங்களுக்கான ஜிஎஸ்டி விகிதங்களில் எந்தவிதமான புதிய மாற்றங்களும் இல்லை. அனைத்து மின்சார வாகனங்களுக்கும் முன்பு போலவே 5% வரி விதிக்கப்படுகிறது. எந்தவிதமான செஸ் வரியும் இல்லை.
18% வரி பெரும் வாகனங்கள்!
சிறிய கார்கள், குறைந்த என்ஜின் திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வணிக வாகனங்கள் ஆகியவை 18% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும். அதே நேரத்தில் பெரிய கார்கள் மற்றும் உயர் ரக மோட்டார் சைக்கிள்கள் 40% ஜிஎஸ்டி வரியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
புதிய ஜிஎஸ்டி வரி விகித மாற்றத்தின்படி, 1,200 சிசிக்கு குறைவான எஞ்சின்கள் கொண்ட பெட்ரோல், எல்பிஜி மற்றும் சிஎன்ஜி கார்கள் மற்றும் 1,500 சிசி வரை டீசல் கார்கள், அவை 4,000 மிமீக்கு குறைவாக இருந்தால், அவற்றுக்கு தற்போதைய 28% ஜிஎஸ்டிக்கு பதிலாக தற்போது 18% ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படும்.
இதனால் மாருதி ஸ்விஃப்ட், வேகன்ஆர், ஹூண்டாய் ஐ20, டாடா அல்ட்ரோஸ், ரெனால்ட் க்விட் மற்றும் ஹூண்டாய் எக்ஸ்டர் போன்ற பிரபலமான கார் மாடல்கள் குறைந்த விலைகளைக் காண உள்ளன.
இந்த மாற்றம் வணிக வாகனங்களும் பொருந்தும். அதன்படி மூன்று சக்கர வாகனங்கள், பேருந்துகள் மற்றும் லாரிகள், ஆம்புலன்ஸ்கள் ஆகியவற்றிற்கு இப்போது 28% க்கு பதிலாக 18% வரி விதிக்கப்படும்.
மேலும் இவற்றிற்கான செஸ் வரியும் நீக்கப்பட்டுள்ளதால், இவற்றின் விலையில் இருந்து 11% முதல் 13 சதவீதம் வரை குறைய உள்ளது.
அதேபோன்று 350 சிசிக்கு குறைவான என்ஜின்கள் கொண்ட ஹீரோ ஸ்பிளெண்டர், ஹோண்டா ஷைன், டிவிஎஸ் அப்பாச்சி, பஜாஜ் பல்சர் ரேஞ்ச் மற்றும் ஆர்இ கிளாசிக் மற்றும் ஹண்டர் 350 மாடல்கள் போன்ற நாடு முழுவதும் அதிகம் விற்பனையாகும் பைக்குகளும் 28% ஜிஎஸ்டிக்கு பதிலாக தற்போது 18% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது.
40% வரி விதிக்கப்படும் கார்கள் மற்றும் பைக்குகள்!
1,200 சிசி பெட்ரோல் அல்லது 1,500 சிசி டீசல் என்ஜின்கள் அல்லது 4,000 மிமீக்கு மேல் அதிக நீளம் கொண்ட அனைத்து நடுத்தர மற்றும் பெரிய கார்களுக்கும் இப்போது 40% ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படும்.
அதன்படி ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ், டாடா ஹாரியர், மஹிந்திரா எக்ஸ்யூவி 700, டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் பல பிரபலமான எஸ்யூவிகள் இதில் அடங்கும்.
அதே போன்று 350 சிசிக்கு மேல் உள்ள பைக்குகளும் ராயல் என்ஃபீல்ட் ஹிமாலயன் 450, கேடிஎம் டியூக் 390, ஹார்லி-டேவிட்சன் எக்ஸ் 440, ட்ரையம்ப் ஸ்பீடு 400 போன்றவை 40% வரியை எதிர்கொள்ளும்.
ஆறுதல் செய்தி!
எனினும் ஆடம்பர் கார் பிரியர்களுக்கு ஆறுதலான செய்தியாக செஸ் வரி நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முந்தைய ஜிஎஸ்டி விதிப்படி பெரிய கார்களுக்கு கார்கள் 28% ஜிஎஸ்டி மற்றும் 17-22% செஸ் வரி வசூலிக்கப்பட்டு வந்தது. இதனால் மொத்த வரியாக 45% முதல் 50% வரி வசூலிக்கப்பட்டு வந்தது.
ஆனால் புதிய மாற்றத்தின்படி தற்போது 40% ஜிஎஸ்டி வரி மட்டுமே வசூலிக்கப்பட உள்ளதால், ஆடம்பர கார் பிரியர்களுக்கு 5 முதல் 10 சதவிகித வரி குறைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.