பொத்தேரியில் பிரபல கல்லூரி அமைந்துள்ள பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டாவது முறையாக போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
கஞ்சா, கோக்கைன், மெத்தபெட்டமைன் போன்ற போதைப்பொருட்கள் பழக்கம் தமிழக இளைஞர்களிடையே அதிகரித்து வருவதாகவும், அதனால் குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

குறிப்பாக பள்ளி கல்லூரி மாணவர்கள் இதற்கு அடியாமையாகி எதிர்காலத்தை கேள்விகுறியாக்கி கொள்கின்றனர்.
இந்தசூழலில் , கடந்த சனிக்கிழமை இரவு தாம்பரத்தை அடுத்த பொத்தேரியை சுற்றியுள்ள அடிக்குமாடி வீடுகளில் தாம்பரம் நகர காவல்துறையைச் சேர்ந்த போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனைகளில் 5,250 கஞ்சா கலந்த சாக்லேட்டுகள் மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள், ஹூக்கா மெஷின் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
7 கல்லூரி மாணவர்கள் உட்பட, 11 நபர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட கல்லூரி மாணவர்கள் அனைவரும் 2 ஆம் ஆண்டு பி.டெக், சிஎஸ்சி மற்றும் 4-ஆம் ஆண்டு பி.டெக் சிஎஸ்சி பிரிவில் படித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக நாம் போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தபோது, “கூடுவாஞ்சேரி காவல் உட்கோட்டம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கக்கூடிய மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் பலர் அபோட் வேலி அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருக்கின்றனர். இதில் ஏராளமான வட மாநில மாணவர்கள் தங்கியிருக்கின்றனர்.
இந்த பகுதியில் கஞ்சா சாக்லேட், பாங், குட்கா போன்ற போதைப்பொருட்களை தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக கூடுவாஞ்சேரி சுற்றுவட்டார பகுதிகளில் குற்றங்களும் நடந்து வந்தன.
இதனை தடுக்கும் நோக்கில், தாம்பரம் கமிஷனர் அபின் தினேஷ் மோடக் உத்தரவின் பேரில் துணை ஆணையர் பவன் குமார் ரெட்டி மேற்பார்வையில் கூடுவாஞ்சேரி உதவி ஆணையர் ராஜீவ் பிரின்ஸ் தலைமையில் 10 குழுக்கள் அமைக்கப்பட்டன. ஒவ்வொரு குழுவிலும் ஒரு காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மற்றும் போலீசார் இடம்பெற்றிருந்தனர்.
ஏற்கனவே மாநகர காவல் ஆணையர் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட உளவு பிரிவு போலீசார் கூடுவாஞ்சேரி பகுதியில் போதைப்பொருள் அதிகம் பயன்படுத்தப்படும் இடம், விற்பனை செய்யப்படும் இடம் என ஒரு லிஸ்ட்டை கொடுத்திருந்தனர்.
அதன் அடிப்படையில் எந்தெந்த டீம் எந்தெந்த குடியிருப்பு சென்று சோதனையிட வேண்டும் என்ற அறிவுரைகளையும் உதவி ஆணையர் ராஜீவ் பிரின்ஸ் வழங்கினார்.
இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் (ஜூலை 26) போலீசார் கூடுவாஞ்சேரி அபோட் வேலி அடுக்குமாடி குடியிருப்பில் ‘பி’ பிளாக் உட்பட பல பிளாக்குகளில் குறிப்பிட்ட வீடுகளில் ரெய்டு நடத்தினர்.

இதில் கஞ்சா, கஞ்சா சாக்லெட், பாங், குட்கா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. 50கி, 100கி, 1/4 கிலோ போதைப்பொருள் பாக்கெட்டுகள் சிக்கின.
இந்த அடுக்குமாடி குடியிருப்பில் பிகார், ஜார்க்கண்ட் மாநிலங்களைச் சேர்ந்த முன்னாள் மாணவர்கள் தான் அதிகம் தங்கியிருக்கின்றனர். அரியர்ஸ் காரணமாக இவர்கள் இங்கே தங்கியிருக்கின்றனர்.
இவர்கள் தான் வடமாநிலங்களுக்கு சென்று வரும் போது, போதைப்பொருட்களை எடுத்து வந்து தற்போது பயின்று வரும் மாணவர்களுக்கு கொடுக்கின்றனர். அவர்கள் கல்லூரிகளுக்கு எடுத்துச் சென்று சக மாணவர்களுக்கு கொடுக்கின்றனர்” என்று கூறினார்.
இந்த சோதனை தொடர்பாக தாம்பரம் கமிஷனர் அபின் தினேஷ் மோடக் இன்று (ஜூலை 28) செய்தியாளர்களிடம் கூறுகையில், “போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்க தொடர்ந்து இதுபோன்று ரெய்டுகளை நடத்தி வருகிறோம். குறிப்பாக கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதிகளில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறோம். நான் தாம்பரம் கமிஷனராக வந்த பிறகு இரண்டாவது முறையாக மிகப்பெரிய சோதனை நடத்தப்பட்டுள்ளது. சுமார் 100 பேர் இந்த சோதனையில் ஈடுபட்டனர். மொத்தம் 12 இடங்களில் நடத்தப்பட்டது. 5 அடுக்குமாடி குடியிருப்புகள், 5 பெட்டிக்கடைகள் மற்றும் கஃபேக்களில் நடத்தப்பட்டன.
இந்த ஆண்டு மட்டும் 350க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதுபோன்று 350க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 1500கிலோ கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை பறிமுதல் செய்துள்ளோம். இதேபோன்ற ரெய்டுகள் தொடரும்” என்று கூறினார்.
ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் மாதம் இதே அடுக்குமாடி குடியிருப்பில் ஒரே நேரத்தில் 1000 போலீசார் உள்ளே நுழைந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இரண்டரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.
மீண்டும் அதே குடியிருப்பில் நடந்த சோதனையில் 5,000 கஞ்சா சாக்லெட்டுகள் உள்ளிட்டவை சிக்கியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.