மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் வரும் 2026-27 கல்வியாண்டு முதல் 9-ம் வகுப்பு மாணவர்கள் புத்தகதைத் பார்த்து தேர்வு எழுதும் முறையை அறிமுகப்படுத்த உள்ளது.
தேசிய கல்விக் கொள்கை 2020 அடிப்படையில் பல முக்கிய அம்சங்களில் மாற்றங்களை சிபிஎஸ்இ வாரியம் மேற்கொண்டு வருகிறது. மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள பள்ளியில் சுமார் 2.6 கோடி மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். 29,009 பள்ளிகள் உள்ளன.
இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் சிபிஎஸ்இ நிர்வாக குழு தரப்பில் கூட்டம் நடந்தது. அப்போது தேசிய கல்வி கொள்கையின் ஒரு பகுதியாக மாணவ மாணவிகள் புத்தகங்களை பார்த்து தேர்வு எழுதுவதற்கு அனுமதி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக வரும் 2026-27 கல்வி ஆண்டில் 9ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு புத்தகம் பார்த்து தேர்வு எழுதும் திட்டம் கொண்டு வரப்பட உள்ளது.
இதன் மூலம் மாணவர்களின் மனப்பாட கற்றலைத் தவிர்த்து, திறன் அடிப்படையிலான கற்றலை ஊக்குவிக்கும் வகையில் இந்த முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. மேலும் மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள், குறிப்புகள், நூலக ஆதாரங்களைப் பயன்படுத்தி கேள்விகளுக்கு விடையளிக்கலாம். இது, தகவல்களை விளக்குதல், பயன்படுத்துதல் மற்றும் மாணவர்களின் பகுப்பாய்வு செய்யும் திறனை மதிப்பிடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
முந்தைய முயற்சிகள்
கடந்த 2014-ல், சிபிஎஸ்இ திறந்த உரை அடிப்படையிலான மதிப்பீட்டை (OTBA) 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு அறிமுகப்படுத்தியது. இந்த நடவடிக்கை மாணவர்களின் விமர்சன சிந்தனை திறனை குறிப்பிடத்தக்க அளவில் உயர்த்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் உரிய பலன் தாராததால், அது 2017-18-ல் நிறுத்தப்பட்டது.
2023-ல் நடத்தப்பட்ட ஆய்வில் ஆசிரியர்களிடையே இம்முறைக்கு ஆதரவு இருப்பதாக கூறப்படும் நிலையில் பள்ளிகளுக்கு பயிற்சியும், வழிகாட்டுதல்களும் வழங்கப்படும். NEP 2020 மற்றும் NCFSE 2023-இன் இலக்குகளுடன் இணைந்து, பயன்பாட்டு அடிப்படையிலான மதிப்பீட்டை இந்த முறை ஊக்குவிக்கும் என்ற தற்போது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.