அமைச்சர் பதவி தொடர்பாக நீதிமன்றம் கூறிய சில கருத்துக்களை நீக்க கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று (அக்டோபர் 6) தள்ளுபடி செய்துள்ளது.
வேலை வாங்கித் தருவதாக கூறி பலரிடம் பண மோசடி செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி 2023 ஜூன் மாதம் கைது செய்யப்பட்டு ஓர் ஆண்டுக்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்த சூழலில் ஜாமின் கேட்டு உச்ச உயர் நீதிமன்றங்களில் சட்டப் போராட்டம் நடத்தினார்.
இதையடுத்து அவருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஜாமீன் வழங்கிய ஓரிரு நாட்களிலேயே செந்தில் பாலாஜி அமைச்சராக பொறுப்பேற்றார்.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வாதம் முன்வைத்த அமலாகக்த் துறை, ‘ஜாமின் கிடைத்த ஒருசில நாட்களிலேயே அமைச்சராக பதவியேற்ற செந்தில் பாலாஜி நிச்சயம் இந்த வழக்கின் சாட்சிகளை கலைக்கக்கூடும். அவரது ஜாமினை ரத்து செய்ய வேண்டும்’ என்று கோரியது.
இதை விசாரித்த முன்னாள் நீதிபதி அபய் ஓஹா தலைமையிலான அமர்வு, உங்களுக்கு ஜாமின் வேண்டுமா? அல்லது அமைச்சர் பதவி வேண்டுமா? என்று நீங்களே முடிவு செய்து கொள்ளலாம் என்று கூறி இருந்தது.
இதையடுத்து செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில் நீதிபதி அபய் ஓஹா தலைமையிலான அமர்வு அளித்த சில கருத்துகளை நீக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று (செப்டம்பர் 6) விசாரித்தது.
நீதிபதி சூர்யா காந்த் மற்றும் நீதிபதி ஜாய்மல்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு, ” அபய் ஓஹா ஓய்வு பெற்ற பின், இந்த மனுவை தாக்கல் செய்வது ஏன்? நீங்கள் அமைச்சராவதை நீதிமன்றம் தடுக்கவில்லை. ஆனால் அமைச்சரானபின்னர் சாட்சிகளை கலைப்பதாக குற்றச்சாட்டு வந்தால் நாங்கள் மீண்டும் ஜாமினை ரத்து செய்வோம்” என்று தெரிவித்தது.
செந்தில் பாலாஜி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், ‘வழக்கு விசாரணையில் இருக்கும்போது குற்றம்சாட்டப்பட்டவர் அமைச்சராக நீடிக்கக் கூடாது எனக் கூறமுடியாது. அவர் தனது செல்வாக்கை செலுத்துகிறார் என்பது கண்டறியப்பட்டால் அவரது ஜாமினை ரத்து செய்யலாம்’ என்று வாதிட்டார்.
இந்த வாதத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, வேண்டுமென்றே வழக்கின் விசாரணையை தாமதப்படுத்த பல்வேறு மனுக்களை தாக்கல் செய்வதாக கூறினார்.
இந்தநிலையில் செந்தில் பாலாஜி அமைச்சராக வேண்டுமென்றால் தனி மனுவாக தாக்கல் செய்து நீதிமன்ற அனுமதியுடன் அமைச்சராகலாம். ஆனால் அவர் விதிமுறைகளை மீறினால் ஜாமின் ரத்து செய்யப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
தொடர்ந்து இந்த வழக்கை ஏன் டெல்லி உயர் நீதிமன்றத்துக்கு மாற்றக் கூடாது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சிங்வி, இப்படி செய்தால் மாநில நீதித்துறை மீது தவறான கருத்துக்கு வழிவகுக்கும் என்று தெரிவித்தார்.
இதற்கு நீதிபதிகள், நாங்கள் கருத்து மட்டுமே தெரிவித்தாக கூறி, இந்த மனுவை தள்ளுபடி செய்தனர்.