மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம் அகவிலைப்படியை உயர்த்த மத்திய அமைச்சரவை இன்று (அக்டோபர் 1) ஒப்புதல் வழங்கியுள்ளது.
பிரதமர்மோடி தலைமையில் இன்று கூடிய மத்திய அமைச்சரவை, விலைவாசி உயர்வை ஈடுசெய்ய, மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலை நிவாரணம் (DR) ஆகியவற்றின் கூடுதல் தவணையை 01.07.2025 முதல் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
3 சதவிகிதம் உயர்த்த ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கும் நிலையில் அகவிலைப்படி 55 சதவிகிதத்தில் இருந்து 58 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
அகவிலைப்படியை உயர்த்துவதன் மூலம் ஆண்டுக்கு ரூ.10083.96 கோடி செலவாகும். சுமார் 49.19 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 68.72 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
இந்த உயர்வு, 7வது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தசரா மற்றும் தீபாவளி பண்டிகை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டிருக்கும் நிலையில் மாநில அரசு ஊழியர்களுக்கான அறிவிப்பு எப்போது வரும் என்ற எதிர்ப்பார்ப்பும் எழுந்துள்ளது.