பிரதமர் மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, 8வது மத்திய ஊதியக் குழுவின் விதிமுறைகளுக்கு இன்று (அக்டோபர் 28) ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் பிற சலுகைகளில் மாற்றம் குறித்து பரிந்துரைக்க ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கும் ஒரு முறை சம்பள உயர்வு தொடர்பாக ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும்.
இந்தநிலையில் 8ஆவது ஊதிய குழுவுக்கான கொள்கை ஒப்புதலை கடந்த ஜனவரி மாதம் வழங்கியது மத்திய அரசு.
ஆனால் ஆணையத்தின் தலைவர், பகுதி நேர உறுப்பினர், செயலாளர் நியமிப்பதில் கால தாமதம் ஆனது.
இந்தநிலையில் 8ஆவது ஊதியக்குழுவின் விதிமுறைகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
மத்திய அமைச்சரவை வெளியிட்ட அறிக்கையின்படி, 8வது மத்திய ஊதியக் குழு ஒரு தற்காலிக அமைப்பாக செயல்படும். இதில் ஒரு தலைவர், ஒரு பகுதி நேர உறுப்பினர், மற்றும் ஒரு உறுப்பினர்-செயலர் ஆகியோர் இருப்பர். இந்தக் குழு அமைக்கப்பட்ட நாளிலிருந்து 18 மாதங்களுக்குள் தனது பரிந்துரைகளைச் சமர்ப்பிக்க வேண்டும். பரிந்துரைகள் இறுதி செய்யப்பட்டவுடன், தேவைப்பட்டால், குறிப்பிட்ட விஷயங்கள் குறித்து இடைக்கால அறிக்கைகளையும் சமர்ப்பிக்கலாம்.
தலைவராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய், பகுதி நேர உறுப்பினராக ஐஐஎம் பெங்களூரு பேராசிரியர் புலக் கோஷ், உறுப்பினர்-செயலராக பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை செயலாளர் பங்கஜ் ஜெயின் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், ‘இடைக்கால அறிக்கை வந்தவுடன் 8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளைச் செயல்படுத்துவது எப்போது என முடிவெடுக்கப்படும்” என்றார்.
8-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அடிப்படையில் குறைந்தபட்ச ஊதியம் ரூ.18 ஆயிரத்தில் இருந்து ரூ.26 ஆயிரமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம், மத்திய அரசில் பணியாற்றும் 50 லட்சம் ஊழியர்கள் மற்றும் 69 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள்.
