புஸ்ஸி ஆனந்த், சிடிஆர் நிர்மல் குமார் தாக்கல் செய்த முன் ஜாமின் வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் காரசார வாதங்கள் நடந்தன.
கரூரில் கடந்த 27ஆம் தேதி, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார், தவெக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன், பவுன்ராஜ் ஆகியோர் மீது 5 பிரிவுகளில் கரூர் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் மதியழகன் , பவுன்ராஜ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில் தலைமறைவாக உள்ள புஸ்ஸி ஆனந்த், சி.டி.ஆர்.நிர்மல் குமார் ஆகியோர் முன்ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தனர்.
அதில், தங்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். பரப்புரையின்போது போலீசார் போதுமான பாதுகாப்பு வழங்கவில்லை. கட்சி நிர்வாகிகள் மட்டும்தான் கூட்டத்தை ஒழுங்குப்படுத்தினர். கூட்டத்தில் குண்டர்கள் உள்ளே புகுந்து கற்கள் மற்றும் செருப்புகளை வீசினர்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜோதிராமன் முன் இன்று (அக்டோபர் 3) பிற்பகல் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீர கதிரவன் ஆஜராகி, ‘என்,ஆனந்த் முன்னாள் புதுச்சேரி எம்.எல்.ஏ., என்பதால் அவரது முன்ஜாமின் மனுவை, சென்னை உயர் நீதிமன்றத்தின் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் எம்.பி./எம்.எல்.ஏ. வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி மட்டுமே விசாரிக்க வேண்டும். எனவே வழக்கு சிறப்பு அமர்வுக்கு மாற்றப்பட வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தார். .
புஸ்ஸி ஆனந்த் மற்றும் சி.டி.ஆர் நிர்மல்குமார் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகவாச்சாரி, ‘மனுதாரர்களுக்கு தங்களது சொந்த கட்சி தொண்டர்கள் பலியாக வேண்டும் என்ற நோக்கம் கிடையாது. ஒரு விபத்தை கொலை என்று கூற முடியாது.
காவல்துறையினர் போதுமான பாதுகாப்பை வழங்க தவறிவிட்டனர். போலீசிடம் அனுமதி கேட்பது எதற்கு? பாதுகாப்பு வழங்கத்தானே…வெவ்வேறு இடங்களில் நடந்த பொதுக்கூட்டத்தின் போது மக்கள் கூட்டத்தை பார்த்து, வேலுசாமிபுரத்துக்கும் அதிக கூட்டம் வரும் என்பதை காவல்துறைதான் கணித்திருக்க வேண்டும். மேலும், அந்த இடம் மனுதாரர்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இந்த சமபவத்தில் சதி நடந்துள்ளது. ஆம்புலன்ஸுகள் நோயாளிகள் இல்லாமல் கூட்டத்துக்குள் வந்துள்ளன.
அதேபோன்று வேலுசாமிபுரம் ஆட்சேபனைக்குரியதாக இருந்தால், மனுதாரர்களின் கோரிக்கையை காவல்துறை நிராகரித்திருக்க வேண்டும். கூட்டத்துக்கு ஒரு நாளைக்கு முன்புதான் அனுமதி கொடுக்கின்றனர். நேரம் இருந்திருந்தால் தமிழக வெற்றிக் கழகம் வேறு இடத்தில் அனுமதி பெற்றிருக்கும். வேறு இடத்தில் கூட்டம் நடத்த அனுமதி கேட்டு நீதிமன்றத்தில் முறையிட வந்தோம். ஆனால் அன்று நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் முறையிட முடியவில்லை. அதனால் வேலுசாமிபுரத்தில் நடத்தும் நிலை வந்தது. காவல்துறை விதித்த ஒரு விதிமுறையை கூட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீறவில்லை.
கன்னியாகுமரியில் நடைபெறும் உள்ளூர் திமுக கூட்டத்தில் ஏதேனும் விபத்து நடந்தால், திமுக பொதுச் செயலாளர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்யுமா? முன்னாள் முதல்வர் கலைஞர் மறைவின் போது அவரது உடலை பார்க்கவந்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர்.
எந்தவித எச்சரிக்கையையும் கொடுக்காமல் போலீசார் தடியடி நடத்தியதால் கூட்டம் அங்கும் இங்கும் அலைமோதியது. அப்போது போலீஸ் தடியடி நடத்தியது ஏன்?
விபத்துகளை விபத்துகளாக பார்க்க வேண்டும். பொதுச்செயலாளர் மீது எப்படி வழக்கு போட முடியும். எங்கு நடந்தாலும் கூட்டத்தை நிர்வகிக்கும் முழுப் பொறுப்பும் மாநில அரசுக்கும், காவல்துறைக்கும்தான் உள்ளது. உயிரை பறிக்க வேண்டும் என்பதற்காக யாரேனும் கூட்டத்துக்கு அழைப்பார்களா?
கூட்டத்தில் செருப்புகள் வீசப்பட்டுள்ளன. அன்று நடந்த முழு குழப்பத்துக்கும் காவல்துறை சரியாக கையாளததே காரணம். நிகழ்ச்சியை ரத்து செய்யும் அதிகாரம் காவல்துறைகே உள்ளது. போலீசார் சொல்லியிருந்தால் கூட்டத்தை ரத்து செய்திருப்போம்” என்று வாதங்களை முன்வைத்தார்.
இதற்கு அரசு சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீர கதிரவன் எதிர்ப்புத் தெரிவித்தார். ஆதாரங்கள் இல்லாமல் இதுபோன்று குற்றம்சுமத்துவதை ஏற்க முடியாது என்று கூறினார்.
தொடர்ந்து நீதிபதி, ‘ஒரு நிகழ்ச்சி ஏற்பாட்டாளராக, உங்களுக்கு எந்தப் பொறுப்பும் இல்லையா?’ என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு மூத்த வழக்கறிஞர் ராகவாச்சாரி, ‘கரூர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மதியழகன் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார்’ என்றார்.
இதற்கு அரசுத் தரப்பில், ‘புஸ்ஸி ஆன்ந்தும், நிர்மல் குமார் உள்ளிட்டோர் தான் நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளனர். கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கருர் நிகழ்வு துரதிஷ்டவசமானது. இந்த சம்பவத்தை தொடர்ந்து தவெகவினர் காணாமல் போய்விட்டனர். பொறுப்பான நிர்வாகிகள் செய்யும் வேலையா இது? தொண்டர்கள் மீது போதிய கவனம் செலுத்தாமல் தலைமறைவானது ஏற்கதக்கது அல்ல.
கூட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் முயன்றனர். பாதுகாப்பும் வழங்கப்பட்டது. அதுபோன்று கட்சியினரால் தான் தொண்டர்களை கட்டுப்படுத்த முடியும். அதை அவர்கள் செய்யவில்லை.
சம்பவ இடத்தில் தண்ணீர் பாட்டில்கள் இல்லை. ஆனால் ஆயிரக்கணக்கில் காலணிகள் கிடந்தன.
கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உடற்கூராய்வில் அவர்கள் நீர்ச்சத்தை இழந்ததன் காரணமாகவே பலர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. அனுமதியின்றி ரோடுஷோ நடத்தினர். இந்த வழக்கின் விசாரணை ஆரம்பக்கட்டத்தில் உள்ளது. இப்போது முன்ஜாமின் வழங்கினால் விசாரணை பாதிக்கும், கடினமாகிவிடும் என்பதால் முன் ஜாமின் வழங்கக்கூடாது’ என்று வாதங்களை முன்வைத்தார்.
பேருந்தின் சிசிடிவி கேமரா காட்சிகளை வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரினார்.
இதையடுத்து ‘உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரின் நிலைமையை நீதிமன்றம் கருத்தில் கொள்கிறது. 41 பேரின் உயிரிழப்புகளுக்கு பொறுப்பான தகவல்களை வழங்கவில்லை. காவல்துறை என்ன நடவடிக்கை எடுத்தது. பிரச்சார கூட்டத்திற்கு 3 மணி முதல் இரவு 10 மணி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளதே? கூட்டத்தை ரத்து செய்திருக்கலாமே? என்று நீதிபதி கேள்வி எழுப்ப, இதற்கு “பிரச்சினையை தவிர்க்கவே கூட்டத்தை ரத்து செய்யவில்லை” என்று அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்டது.
இரு தரப்பு விசாரணையை தொடர்ந்து இன்று மாலை உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி அறிவித்துள்ளார்.
‘ஒரு மணி நேரம் இன்று விசாரணை நடைபெற்றது. மற்ற வழக்குகள் முடிந்த பிறகு, இதில் உத்தரவு பிறப்பிக்கப்படும்’ என்று தவெக வழக்கறிஞர் அறிவழகன் விசாரணைக்கு பின் பேட்டி அளித்துள்ளார்.