தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தாக்கல் செய்த முன்ஜாமின் மனு இன்று(அக்டோபர் 3)சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வருகிறது.
கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சார பொதுக்கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
இதுதொடர்பாக கரூர் டவுன் போலீசார், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், பொதுச்செயலாளர் ஆனந்த், இணைச்செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் உள்ளிட்டோர் மீது ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 29ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டம் குஜிலம்பாறை அருகே உறவினர் வீட்டில் தங்கி இருந்த மதியழகனை போலீசார் கைது செய்து கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் தலைமறைவாகியுள்ள புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.
இதற்கிடையே சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் புஸ்ஸி ஆனந்த்தும், நிர்மல் குமாரும் முன்ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு இன்று நீதிபதி ஜோதிராமன் முன் விசாரணைக்கு வருகிறது.
இந்த வழக்கு விசாரணையின் போது அதிமுக, பாஜக வழக்குகளில் அதிகம் வாதாடிய மூத்த வழக்கறிஞர் ராகவாச்சாரி புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார் சார்பில் ஆஜராகி வாதாடவுள்ளார்.
அரசு தரப்பில் கூடுதல் அரசு வழக்கறிஞர் திருவிடைக்குமார் ஆஜராகி வாதாடுகிறார்,
காலை 11 மணியளவில் விசாரணை நடைபெறுகிறது, 12 மணிக்குள் புஸ்ஸி ஆனந்துக்கு பெயில் கிடைக்குமா அல்லது சிறை செல்வாரா என்பது தெரிந்துவிடும்.