41 பேரை பலி கொண்ட கரூர் துயர சம்பவம் தொடர்பான விசாரணைக்காக டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் இன்று (டிசம்பர் 30) 2-வது நாளாக தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர்கள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, இணைப் பொதுச்செயலாளர் நிர்மல்குமார் உள்ளிட்டோர் ஆஜராக உள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், செப்டம்பர் 27-ந் தேதி கரூரில் பிரசாரம் மேற்கொண்டார். அந்த கூட்டத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியாகினர்.
இது தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சிபிஐ விசாரித்து வருகிறது. கரூரில் முகாமிட்ட சிபிஐ அதிகாரிகள் ஏற்கனவே 200-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தினர்.
இதனையடுத்து டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணைக்கு ஆஜராக தவெக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார், மதியழகன் உள்ளிட்டோரும் கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேலு, எஸ்பி ஜோஷ் தங்கையா உள்ளிட்டோரும் ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பி இருந்தது.
இந்த விசாரணை நேற்று முதல் நடைபெற்று வருகிறது. டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் நேற்று காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை சுமார் 9 மணி நேரம் தவெக நிர்வாகிகளிடம் சிபிஐ அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை கேட்டு பதில்களைப் பெற்றனர்.
இதனையடுத்து இன்று 2-வது நாளாகவும் டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் நடைபெறும் விசாரணைக்கு தவெகவின் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார் உள்ளிட்டோர் ஆஜராக உள்ளனர்.
