ADVERTISEMENT

Ladakh: ‘பற்றி எரியும் பனிமலை’.. நேபாளம் பாணியில் லடாக்கில் ‘Gen Z’ போராட்டம் பிரகடனம்- பாஜக அலுவலகத்துக்கு தீ வைப்பு- 4 பேர் பலி!

Published On:

| By Mathi

Ladakh Gen Z

லடாக் யூனியன் பிரதேசத்துக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும்; லடாக் பழங்குடிகளுக்கு சுயாட்சி கவுன்சில்கள் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து Gen Z போராட்டம் வெடித்துள்ளதாக (Ladakh Gen Z) போராட்டக் குழுவினர் பிரகடனம் செய்துள்ளனர். இந்தப் போராட்டத்தில் பாஜக அலுவலகங்களுக்கு தீ வைக்கப்பட்டன. இந்த வன்முறைகளில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

2019-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டன. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம், சட்டமன்றத்துடன் செயல்படும்; லடாக் யூனியன் பிரதேசம், சட்டமன்றம் இல்லாததாக இருக்கும் என அறிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இதனால் லடாக் யூனியன் பிரதேசம், மத்திய அரசின் நேரடி ஆட்சியின் கீழ் இருந்து வருகிறது. இதற்கு எதிராக லடாக் யூனியன் பிரதேசத்துக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும்; அரசியல் சாசனத்தின் கீழான உரிமைகளை வழங்க வேண்டும்; லடாக் உள்ளூர் பழங்குடிகளின் தனித்துவத்தைப் பாதுகாக்க சுயாட்சி நிர்வாக கவுன்சில்கள் அமைக்கப்பட வேண்டும்; இதற்காக லடாக் பழங்குடிகளை அரசியல் சாசனத்தின் 6-வது அட்டவணையில் சேர்க்க வேண்டும் என்பது அம்மக்களின் கோரிக்கை.

பிரதான கோரிக்கை என்ன?

ADVERTISEMENT

இந்திய அரசியல் சாசனத்தின் 6-வது அட்டவணையானது உள்ளூர் பழங்குடி மக்களுக்கான சுயாட்சி கவுன்சில்களை அமைக்க வகை செய்கிறது. இதன்படியே அஸ்ஸாம், மேகாலயா, திரிபுரா, மிசோரமில் உள்ளூர் சுயாட்சி நிர்வாக கவுன்சில்கள் அமைக்கப்பட்டுள்ளன. லடாக் பழங்குடிகளுக்கும் இத்தகைய சுயாட்சி கவுன்சில் அமைக்கப்பட வேண்டும்; இதற்காக தங்களையும் 6-வது அட்டவணையில் சேர்க்க வேண்டும் என்பதுதான் பிரதான கோரிக்கை.

இத்தகைய சுயாட்சி கவுன்சில் மூலம் உள்ளூர் பழங்குடி மக்களின் நிலம், கலாசார உரிமைகள் பாதுகாக்கப்படும்.

ADVERTISEMENT

லடாக் பழங்குடிகள்

லடாக்கின் மொத்த மக்கள் தொகையில் 97% பேர் பழங்குடிகள்.

லே பிராந்தியத்தில் 66.8%; நுப்ராவில் 73.35%, கல்ஸ்தியில் 97.05% , கார்கிலில் 83.49% , சங்குவில் 89.96%, ஜான்ஸ்கரில் 99.16% பேர் பழங்குடிகள்.

போராட்டத்தை முன்னெடுக்கும் அமைப்பு எது?

லடாக் பழங்குடிகளுக்கு சுயாட்சி கவுன்சில் கோரியும் தங்களையும் அரசியல் சாசனத்தின் 6-வது அட்டவணையில் இணைக்க வலியுறுத்தியும் Leh Apex Body (LAB) இந்தப் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இந்த அமைப்புடன் சூழலியல் செயல்பாட்டாளர் Sonam Wangchuk இணைந்துள்ளார். மேலும் Kargil Democratic Alliance (KDA) என்ற அமைப்பும் இந்தப்
போராட்டங்களில் இணைந்துள்ளது.

https://twitter.com/Wangchuk66/status/1970772174463275500

பாஜக அலுவலகத்துக்கு தீ வைப்பு- வன்முறை வெடித்தது ஏன்?

லடாக் மக்களின் இத்தகைய கோரிக்கைகளை முன்வைத்து சூழல் செயல்பாட்டாளர் Sonam Wangchuk தலைமையில் ஏராளமானோர் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை செப்டம்பர் 10-ந் தேதி தொடங்கினர். மத்திய அரசு தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து மத்திய அரசு முதல் கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. 2-வது கட்டமாக அக்டோபர் 6-ந் தேதி பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

Sonam Wangchuk கடந்த 15 நாட்களாக தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதால் அவரது உடல்நிலை மோசமடைந்தது. இது லடாக்கில் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் உடல்நிலை மோசமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதால் உச்சகட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது.

மேலும் மத்திய அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தவும் லடாக் இளைஞர்கள் அழைப்பு விடுத்தனர்.

அதேநேரத்தில் இந்தப் போராட்டத்தின் பின்னணியில் காங்கிரஸ் இருப்பதாக பாஜக தலைவர்கள் குற்றம்சாட்டினர். இதனால் லடாக் இளைஞர்கள் கொந்தளித்தனர்.

இந்த சூழலில் புதன்கிழமையன்று செப்டம்பர் 24-ந் தேதி முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அத்துடன் லடாக் NDS Memorial Ground -ல் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ஒன்று திரண்டு பேரணி நடத்தினர். அப்போது பாஜக அலுவலகம் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து பாஜக அலுவலகம் தீ வைத்தும் எரிக்கப்பட்டது.

https://twitter.com/suryapsingh_IAS/status/1970829238359212290

இதனால் போலீசாரும் துணை ராணுவப் படையினரும் குவிக்கப்பட்டனர்.

ஆனாலும் இளைஞர்களின் போராட்ட உக்கிரம் குறையவில்லை. இதனால் போலீசார் தடியடி நடத்தினர்; கண்ணீர் புகை குண்டுகளை வீசி அடக்க முயற்சித்தனர்;

இந்த மோதல்களில் 4 பேர் பலியாகினர்; 60 பேர் படுகாயமடைந்தனர்.

லடாக் போராட்டங்கள் வன்முறையாக வெடித்த நிலையில் பெரும் எண்ணிக்கையிலான பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

Gen Z போராட்டம் என பிரகடனம்

நேபாளத்தில் ஆட்சியாளர்களுக்கு எதிராக இளைஞர்களின் Gen Z போராட்டம் புதிய சரித்திரத்தை எழுதியது. நேபாளத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதேபோல லடாக்கிலும் நடப்பது Gen Z போராட்டம் என்கிறார் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தும் சூழலியல் செயல்பாட்டாளர் Sonam Wangchuk . இதேபோல பல்வேறு போராட்ட குழுக்களும் லடாக்கில் Gen Z போராட்டம் தொடங்கிவிட்டதாக சமூக வலைதளங்களில் பிரகடனம் செய்துள்ளன. இதனால் பனிமலை லடாக்கில் பெரும் பதற்றம் நீடிக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share