“சிக்கிம் தலைநகர் காங்டாங்கில் ‘புத்தகயா’வை மீட்க வலியுறுத்தி பவுத்த – புத்த பிட்சுகள் நூற்றுக்கணக்கானோர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்”.. இது அண்மைய செய்தி.
புத்தகயா மீட்புக்கான பவுத்தர்களின் இத்தகைய போராட்டம் என்பது பல நூற்றாண்டுகளாக தொடர் சங்கிலியைப் போல நடந்து வருகிறது என்கிறது வரலாறு.

புத்த கயாவின் பின்னனி என்ன?
பீகார் மாநிலத்தில் உள்ளது மகாபோதி புத்த கயா ஆலயம். சித்தார்த்தன் என்ற கவுதம புத்தர் ‘ஞானம்’ பெற்ற இடமாக போற்றப்படுகிறது. இந்த புத்தகயா ஆலயத்தை கிமு 3-ம் நூற்றாண்டில் கட்டி எழுப்பியவர் மவுரியப் பேரரசர் அசோகர்.
உலகம் முழுவதும் பரவி இருக்கும் பவுத்தர்களின் புனித தலங்களில் முதன்மையானது இந்த புத்த கயா. இந்துக்கள் காசிக்கு செல்வதும் இஸ்லாமியர்கள் மெக்கா மெதினா செல்வதும் கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் செல்வதும் எப்படி புனித கடமையோ அதேபோல பவுத்தர்களின் புனித தலமாக , பவுத்த பிட்சுகள் எனப்படும் பிக்குகள் ஞானம் பெறும் புனித இடமாக போற்றப்படுகிறது இந்த புத்தகயா.
பீகார் மாநிலத்தின் தலைநகரான பாட்னா நகரில் இருந்து 120 கி.மீ. தொலைவில் புத்த கயா உள்ளது.

புத்த கயாவில் என்ன பிரச்சனை?
பவுத்தம் தோன்றிய காலம் தொடங்கி அசோகர் காலங்களை கடந்து கி.பி. 13-ம் நூற்றாண்டு வரை பவுத்தர்களால் மட்டுமே நிர்வகிக்கப்பட்ட பவுத்தர்களின் முதன்மை திருத்தலமாக இருந்தது இந்த புத்தகயா.
இந்தியாவில் ஆரியர் தொடங்கி காலந்தோறும் எண்ணற்ற அந்நியர் படையெடுப்புகள் நிகழ்ந்திருக்கின்றன. கி.பி. 1550-ல் ஆரியர்களின் வைதீக மதத்தைச் சேர்ந்த காமண்டி கிரி என்ற சாது, புத்த கயாவில் காலடி வைத்தார். அன்று தொடங்கியது ஆரிய பார்ப்பனர்களின் ஆக்கிரமிப்பு.
எந்த வைதீகத்தை- எந்த சனாதனத்தை பவுத்தர் எதிர்த்தாரோ அதே சனாதனமும் வைதீக சடங்குகளும் புத்தர் ‘ஞானம்’ பெற்றதாக நம்பப்படும் புத்த கயா ஆலயத்துக்குள் குடியேறிவிட்டன.
புத்த கயாவுக்குள் வைதீக மத கோவில்கள் முளைத்தன; புத்த கயா ஆலயத்துக்குள்ளேயே வைதீக சடங்குகள் நடத்தப்பட்டன.புத்த கயாவுக்குள்தான் சிவன் வசிக்கிறார்.. புத்த கயாவுக்குள்தான் பஞ்ச பாண்டவர்கள் உறங்குகின்றனர்.. பவுத்தர் என்பவரே விஷ்ணுவின் அவதாரம்தான் என்றெல்லாம் முன்னுக்குப் பின் முரணான வழக்கம் போல ஆளுக்கு ஒரு கட்டுக் கதைகளை கடந்த சில நூற்றாண்டுகளாக கட்டவிழ்த்து கொண்டே இருக்கின்றனர்.

புத்த கயாவில் யார் யாருக்கு இடையே பிரச்சனை?
பவுத்தர்களின் புனித தலமான புத்த கயாவை பார்ப்பனர்கள் ஆக்கிரமித்துக் கொண்டனர்; அதை இன்றைய இந்து கோவிலாகவும் இந்த புத்தகயாவுக்கும் பவுத்தர்களுக்குமே தொடர்பு இல்லை என்றும் சொல்கின்றனர். புத்த கயா மீட்புக்காக சிக்கிம் முதல் தென்கோடி இந்திய முனை வரை நடக்கும் பவுத்தர்களின் போராட்டம்- பார்ப்பனர்களின் பவுத்த கயா ஆக்கிரமிப்புக்கு எதிரானது.
பவுத்த கயா மீட்பு போராட்டத்தின் வரலாறு?
பவுத்த கயா மீட்புக்கான போராட்டம் நெடுங்காலமாக நடைபெறுகிறது. நாடு விடுதலை பெறுவதற்கு முன்னர் இலங்கையில் இருந்து வந்த அனகாரிக தர்மபாலர் கி.பி.1891-ல் புத்த கயா மீட்பு இயக்கத்தை முன்னெடுத்தார்.
1900-களில் இந்திய விடுதலைப் போராட்டம் நடந்த போதும் காங்கிரஸ் கட்சிக்குள் புத்தகயா விவகாரம் முதன்மையான விவாதப் பொருளாக இருந்தது. வட இந்திய தலைவர்களிடையே புத்த கயா குறித்து கருத்து மோதல்கள் இருந்தன.
இதனால் நாடு விடுதலை அடைந்த பின்னர் 1949-ம் ஆண்டு புத்த கயா கோவில் மசோதா என்று பீகார் மாநில சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்டத்தின் படி புத்த கயா கோவில் மேலாண்மை குழுவில் 4 பவுத்தர்கள், 4 இந்துக்கள் இடம் பெற்றுள்ளனர்; இந்த குழுவின் தலைவர் கயா மாவட்ட மாஜிஸ்திரேட். அத்துடன் மாஜிஸ்திரேட் கட்டாயம் இந்துவாக இருக்க வேண்டும்; அப்படி அவர் இந்துவாக இல்லை எனில் ஒரு இந்துவையே புத்த கயாவின் மேலாண்மை குழு தலைவராக நியமிக்க வேண்டும் என்கிறது இந்த 1949-ம் ஆண்டு சட்டம்.

1949-ம் ஆண்டு முதல் இந்த சட்டத்தைத் திரும்பப் பெற கோரியும் தொடர் போராட்டங்களை சாத்வீக அடிப்படையில் பவுத்தர்கள் நடத்தினர்.
கடந்த 2013-ம் ஆண்டுதான் புத்த கயா மேலாண்மை குழுவின் தலைவரான கயா மாவட்ட மாஜிஸ்திரேட் இந்துவாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என திருத்தம் கொண்டுவரப்பட்டது.
இப்போது என்ன போராட்டம்?
பவுத்தர்களின் நெடுங்கால போராட்டமே, புத்த கயா பவுத்தர்களுக்குதான் சொந்தம்; புத்த கயாவை விட்டு பார்ப்பனர்கள் வெளியேறுங்கள் என்பதுதான்.
1992-ம் ஆண்டு ஜப்பான் பவுத்த பிட்சு சராய் கசாய், பார்ப்பனர்களுக்கு எதிரான- புத்த கயா மீட்பு போராட்டத்தை தீவிரப்படுத்தினார். பல்வேறு மாநிலங்கள், பல்வேறு நாடுகளில் இருந்தும் பவுத்த பிட்சுகள் புத்த கயாவுக்கு வந்து போராட்டம் நடத்துகின்றனர்.
லடாக் தொடங்கி சிக்கிம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்கள், உ.பி., மகாராஷ்டிரா, கர்நாடகா என பவுத்தர்கள் பெருந்திரளாக வாழும் நிலம் முழுவதும் ‘புத்த கயா மீட்பு போராட்டம்’ தொடர்ந்து நடைபெறுகிறது.
அதேநேரத்தில் பவுத்தர்களிடையே ‘வைதீக இந்து சனாதனிகள்’ ஏற்படுத்தி வைத்துள்ள பிளவும் கூர்மையடைந்து இரு பிரிவினராக பவுத்தர்கள் பிரிக்கப்பட்டு நிற்பதால் பவுத்தர்களின் இந்தப் போராட்டம் வீச்சு அடைந்துவிடாமல் மழுங்கடிக்கச் செய்யப்பட்டு வருகிறது என்கின்றனர் வரலாற்று ஆர்வலர்கள்.