கல்யாண மேடை என்றாலே பட்டுப்புடவை, மேள தாளம், போட்டோஷூட், உறவினர்கள் கூட்டம் தான் நினைவுக்கு வரும். ஆனால், முகத்தில் கல்யாண களை போவதற்கு முன்பே, மேக்கப் கலையறதுக்கு முன்னாடியே ஒரு மணப்பெண் லேப்டாப்பைத் திறந்து சீரியஸாக வேலை பார்த்தால் எப்படி இருக்கும்?
இந்தியாவின் கோயல் ஏஐ (KoyalAI) என்ற ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் இணை நிறுவனர் கௌரி அகர்வால் (Gauri Agarwal), தனது திருமணத்தன்று செய்த காரியம் தான் இப்போது இணையத்தின் ஹாட் டாபிக்.
நடந்தது என்ன?
கௌரி அகர்வாலுக்குத் திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்தது. மணப்பெண் புகுந்த வீட்டிற்குச் செல்லும் ‘பிதாய்’ (Bidaai) சடங்கு நடப்பதற்குத் தயாராகிக் கொண்டிருந்த நேரம் அது. ஆனால், திருமணம் முடிந்த சரியாக 10-வது நிமிடத்தில், அவரது நிறுவனத்தின் மென்பொருளில் ஒரு முக்கியமான பிழை (Critical Bug) இருப்பது தெரியவந்தது.
சாதாரண வேலையாக இருந்தால், “நாளைக்குப் பாத்துக்கலாம்” என்று சொல்லியிருக்கலாம். ஆனால், அது வாடிக்கையாளர்களைப் பாதிக்கும் பிரச்சனை என்பதால், சற்றும் யோசிக்காமல், அந்தத் திருமணக் கோலத்திலேயே, கனமான லெஹங்காவை கட்டிக்கொண்டு லேப்டாப்பைத் திறந்து ‘கோடிங்’ செய்ய அமர்ந்துவிட்டார் கௌரி.
சகோதரரின் விளக்கம்:
இந்தப் புகைப்படத்தை சமூக வலைத்தளமான எக்ஸ் (X) தளத்தில் பகிர்ந்தவர் அவரது சகோதரர் மெஹுல் அகர்வால். அவர் கூறுகையில், “பலர் இதை விளம்பரத்திற்காக எடுக்கப்பட்ட போட்டோஷூட் என்று நினைக்கலாம். ஆனால் இது நிஜம். அந்த ‘பக்’கை (Bug) ஃபிக்ஸ் செய்ய அவளுக்கு அந்த நேரம் தேவைப்பட்டது. இதைப்பார்த்து எங்கள் அப்பா, அம்மா, உறவினர்கள் என எல்லோரும் கத்தினார்கள். ஆனால், வேலையை முடித்துவிட்டுதான் அவள் எழுந்தாள். ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனருக்கு ‘விடுமுறை’ என்பதே கிடையாது என்பதற்கு இதுவே சாட்சி” என்று பதிவிட்டுள்ளார்.
இணையத்தில் வெடிக்கும் விவாதம்:
இந்தப் புகைப்படம் வைரலானதும், நெட்டிசன்கள் இரண்டு அணிகளாகப் பிரிந்து விவாதித்து வருகின்றனர்.
பாராட்டு மழை: “தொழில் முனைவோராக இருப்பது சாதாரண விஷயம் அல்ல. நாராயண மூர்த்தி போன்றவர்கள் சொன்ன 70 மணி நேர வேலை கலாச்சாரத்திற்கு இவர் ஒரு முன்னுதாரணம்” என்று சிலர் பாராட்டுகின்றனர்.
கடும் விமர்சனம்: மறுபுறம், “வாழ்க்கையில் ஒருமுறை நடக்கும் திருமணத்தில் கூட நிம்மதியாக இருக்க முடியாதா? இது ஆரோக்கியமான செயல் அல்ல. இது ‘டாக்ஸிக் கல்ச்சர்’ (Toxic Hustle Culture) என்று சொல்லப்படும் மோசமான வேலை கலாச்சாரம்” என்று பலர் விமர்சிக்கிறார்கள்.
எது எப்படியோ, “கல்யாணமா இருந்தாலும் சரி, காது குத்தா இருந்தாலும் சரி… பக் வந்தா பிக்ஸ் பண்ணனும்” என்ற கௌரியின் செயல், ஸ்டார்ட்அப் உலகின் அழுத்தமான மறுபக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
