கடந்த ஜூலை மாதம் சிதம்பரம் நடராஜர் கோயில் திருவிழா நடைபெற்றது. அதற்காக 2 நாட்கள் பாதுகாப்பிற்காக சுமார் 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.
அவர்களுக்கு உணவு வசதி செய்தவதற்காக அங்குள்ள காவல்நிலைய அதிகாரி ஒருவர், தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டை விற்று வரும் நசீர் என்பவரிடம் ரூ.4 லட்சம் வாங்கினார். ஆனால் அந்த பணத்தை வாங்கி வைத்துக்கொண்டு, கோவில் நிர்வாகிகளிடம் போலீசாருக்கு சாப்பாடு வழங்கும்படி கூறியுள்ளார். அதன்படி அவர்களும் கோவிலில் வழங்கப்படும் பொங்கல், லெமன் சாதம் பிரசாதங்களை உணவாக வழங்கினர்.
இதனையறிந்த சில போலீசார், பணம் வாங்கி பதுக்கிக்கொண்ட அந்த மாமூல் அதிகாரி மீது காவல்துறைக்கு தலைமைக்கு மொட்டை கடிதம் அனுப்பினர்.
இதற்கிடையே நசீரிடம் மாமூல் வாங்கும் சிதம்பரம் காவல்நிலைய அதிகாரியிடம் ஒருவர் புகார் அளிக்க சென்றுள்ளார். ஆனால் அதனை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை என்றதும் அந்த நபர், லாட்டரி சீட்டு விற்கும் நசீரிடம் போலீசார் மாமூல் வாங்கி வருவதாக டிஜிபிக்கு புகார் அனுப்பியுள்ளார்.
இதனையடுத்து டிஜிபி அலுவலகத்தில் இருந்து கடலூர் மாவட்ட காவல் தலைமைக்கு மெமோ அனுப்பப்பட்டது. இதுதொடர்பாக ஐஜி அஸ்ரா கார்க், கடலூர் மாவட்ட எஸ்.பி ஜெயக்குமாருக்கு அறிவுறுத்தியுள்ளார். அதன் அடிப்படையில் சிதம்பரம் டிஎஸ்பி லாமேக் மற்றும் நகர காவல் ஆய்வாளர் ரமேஷ் பாபு ஆகியோரிடம் விளக்கம் கேட்டிருந்தார் எஸ்.பி. ஜெயக்குமார்.
ஆனால் அவர்கள், ’என்னது லாட்டரி சீட்டா, அதெல்லாம் இங்கே இல்லை’ என்றும், ’மாமூல் யாரும் வாங்கவே இல்லை’ என ஒரேடியாக மறுத்து எஸ்.பிக்கு பதில் தெரிவித்தனர். இந்த தகவல் ஐஜிக்கும் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து ஐஜி உத்தரவின் பேரில், லாட்டரி சீட்டு விற்பனை மற்றும் மாமூல் தொடர்பான குற்றச்சாட்டு உண்மைதானா என விசாரித்து நடவடிக்கை எடுக்க உயரதிகாரி பண்ருட்டி டிஎஸ்பி ராஜா தலைமையில் ஸ்பெசல் டீம் அமைக்கப்பட்டது.

அதன்பின்னர் கடலூர் மாவட்டம் சிதம்பரம் உட்கோட்டம் பகுதியில் நஷீர் என்கின்ற ஜம்பு பல காலமாக தடை செய்யப்பட்ட லாட்டரிகளை விற்பனை செய்து வருவதும், அதற்காக நகர காவல்நிலைய போலீசார் உட்பட பலருக்கும் மாமூல் கொடுத்து தனது லாட்டரி பிசினஸை தடையில்லாமல் விரிவுபடுத்தி வந்ததும் தெரியவந்தது.
சிதம்பரம் பகுதியில் ஆர்ப்பாட்டம், போராட்டம் என்றாலோ, விஐபி பந்தபஸ்து என்றாலோ போலீசாருக்கும், கைது செய்யப்படுவர்களுக்கும் சாப்பாடு வாங்கி கொடுப்பதெல்லாம் நசீருடைய பணத்தில் தான் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து கடந்த 2ஆம் தேதி நசீரின் தம்பி செல்வராஜை தட்டித் தூக்கியது ஸ்பெசல் டீம். அவரிடம் இருந்து டைரி மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து ’நசீர் எங்கிருக்கிறார்’ என போலீசார் விசாரித்தனர். முதலில் உண்மையை சொல்ல மறுத்த செல்வராஜை தங்களுக்கே உரிய பாணியில் விசாரித்தனர். அதன்பின்னர் தான் பாண்டிச்சேரியில் இருந்து வெளியூர் செல்ல நசீர் தயாராகி வருவதை தெரிவித்துள்ளார் செல்வராஜ்.
உடனடியாக அங்கு விரைந்த ராஜா தலைமையிலான ஸ்பெசல் டீம், நசீர் என்ற ஜம்பு, சரவணன் என்ற இசை சரவணன், கிருபாகரன், முருகன் ஆகிய 4 பேரை கைது செய்து விசாரித்தனர்.

அப்போது ’உனது தம்பிக்கு செல்வராஜ் என்ற இந்து மதம் தொடர்புடைய பெயர், உனக்கு முஸ்லீம் பெயரா’ என போலீசார் கேட்டுள்ளனர்.
அதற்கு நசீர், ”சார் எனது உண்மையான பெயர் ஜம்பு, எனது மனைவி முஸ்லீம் நாங்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்யும் போது, மதம் மாறி எனது பெயரையும் முஸ்லீம் பெயராக மாற்றிவிட்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து லாட்டரி சீட்டு குறித்து நசீர் அளித்த வாக்குமூலத்தின் படி, இந்த லாட்டரி சீட்டு விற்பனையை 1995ஆம் ஆண்டு முதல் நடத்தி வருகிறார். 2000ஆம் ஆண்டில் லாட்டரி சீட் தமிழக அரசு தடை செய்து உத்தரவிட்டது. ஆனால் அதையும் மீறி தனது லாட்டரி விற்பனையை மாமூல் கொடுத்து படுஜோராக நடத்தி வந்துள்ளார் நசீர்.
லாட்டரி சீட்டுகள் ஒருநாளைக்கு 13 முதல் 15 லட்சம் வரை விற்கப்படுகிறது. ஒரு லாட்டரி சீட்டு ரூ.45க்கும், 999, 444, 111 போன்ற பேன்சி நம்பர் லாட்டரி சீட்டு என்றால் ரூ.60க்கும் விற்பனை செய்யப்படும். ஒருநபர் குறைந்தபட்சம் 10 சீட்டுகள் முதல் அதிகபட்சமாக நூற்றுக்கு மேற்பட்ட சீட்டுகளை வாங்குவார்களாம். இதில் மாமூலாக மட்டும் மாதம் ரூ.15 லட்சம் வரை கொடுத்து தனது தொழிலுக்கு பாதகம் ஏற்படாமல் பார்த்து வந்தார்.
அதோடு தன்னிடம் மாமூல் வாங்கியவர்களின் பெயரையும் போலீஸ் விசாரணையில் பட்டியலிட்டுள்ளார் நசீர். அதன்படி டிஎஸ்பி லாமேக், இன்ஸ்பெக்டர் ரமேஷ் பாபு, எஸ்.ஐ. பரணிதரண், எஸ்எஸ்ஐ நடராஜன், ஏட்டு கணேசன், முதல்நிலை காவலர் கோபால், தலைமை காவலர் கார்த்தி உட்பட 7 பேருக்கு மாமூல் வழங்கியுள்ளார்.
இந்த பட்டியலை ஸ்பெசல் டீம் டிஎஸ்பி ராஜா மேலிடத்துக்கு அனுப்பினார். அதன்படி டிஎஸ்பி தவிர குற்றம்சாட்டப்பட்ட 6 பேரும் இரவோடு இரவாக வேலூர் எஸ்பியிடம் ரிப்போர்ட் செய்ய உத்தரவிடப்பட்டது.
பின்னர் அந்த 6 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பொதுவாக டிஎஸ்பி மீது உள்துறையில் இருந்து தான் நடவடிக்கை எடுக்கப்படும். அதன்படி நடவடிக்கை கோரி கோப்புகள் உள்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளன. ஆனால் இந்த நேரத்தில் டிஎஸ்பி லாமேக் மெடிக்கல் லீவில் சென்றுள்ளார்.
நசீரிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. நசீரிடம் போலீசார் மட்டுமின்றி அங்குள்ள விசிக, பாமக, திமுக அதிமுக உட்பட பல்வேறு கட்சியினரும் மாநாடு மற்றும் கூட்டத்துக்காக பணம் வாங்கியுள்ளனர். மேலும் சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், சிதம்பரத்தில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்ட போலீசாரும் அவ்வபோது நசீரிடம் மாமூல் வாங்கியுள்ளனர்.
குறிப்பாக சமீபத்தில் ஒரு பத்திரிகையாளருக்கு 45 இன்ச் டிவி வாங்கி கொடுத்துள்ளார் நசீர். இதுபோல தன்னிடம் மாமூல் வாங்கிய 81 பேர் பெயர், அவர்களுக்கு மாதம் கொடுக்கப்பட்ட பணம் குறித்தும் டைரியில் எழுதி வைத்துள்ளார்.

இந்த டைரி தற்போது ஐஜி அஸ்ரா கார்க் வசம் உள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள 81 பேர் மீதும் எப்படி நடவடிக்கை என்பது குறித்து காவல்துறை தலைமையுடன் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மொத்தமாக அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்காமல், பகுதி பகுதியாக பிரித்து நடவடிக்கை எடுக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
லாட்டரி சீட்டு விற்பனையாளர் நசீரின் கைது மற்றும் ஐஜியிடம் சிக்கியுள்ள டைரியால் தற்போது போலீசார் மட்டுமின்றி பல்வேறு அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் என பலரும் பீதியில் உறைந்துள்ளனர்.
இந்த நிலையில் கடலூர் எஸ்.பி ஜெயக்குமார் ஒவ்வொரு ஸ்டேசனிலும் அதிகம் கையூட்டு வாங்குவது யார் யார் என விசாரித்து பட்டியல் எடுத்து வருகிறார்.
அதே சமயம், லஞ்சம் வாங்கும் ஏட்டு முதல் டிஎஸ்பி வரையுள்ள போலீசாரை குறிப்பிட்டு “மாமூல் வாங்குவதற்கு நீங்கள் பிச்சையெடுக்கலாம். இனி யாராவது சமூக விரோத செயலுக்கு உடந்தையாக இருந்தால் நான் கடுமையான நடவடிக்கை எடுப்பேன்” என ஓபன் மைக்கில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.