காரைக்குடியில் நள்ளிரவில் பரபரப்பு: கார்த்தி சிதம்பரம் எம்.பி. அலுவலகம் மீது பாட்டில் குண்டு வீச்சு!

Published On:

| By Pandeeswari Gurusamy

Chidambaram

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் எம்.பி. ஆகியோரின் கூட்டு அலுவலகம் மீது நேற்று நள்ளிரவில் அடையாளம் தெரியாத நபர்கள் பாட்டில் வெடிகுண்டுகளை வீசிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காரைக்குடி சுப்பிரமணியபுரம் தெற்கு முதல் வீதியில் முன்னாள் மத்திய நிதி மற்றும் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் எம்.பி. ஆகியோரின் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு ஆண்டியப்பன் (47) என்பவர் காவலாளியாகப் பணியாற்றி வருகிறார்.

ADVERTISEMENT

நேற்று நள்ளிரவு சுமார் 12 மணி அளவில் காவலாளி ஓய்வெடுக்கச் சென்ற நேரத்தில், அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் மண்ணெண்ணெய் நிரப்பப்பட்ட பாட்டில் குண்டுகளை அலுவலகத்தை நோக்கி வீசியுள்ளனர். இதில் ஒரு பாட்டில் தரையில் பட்டு சிதறியது. மற்றொரு பாட்டில் அருகில் இருந்த புல்வெளியில் விழுந்ததால் வெடிக்கவில்லை. இன்று காலை காவலாளி வந்து பார்த்தபோதுதான் இந்த தாக்குதல் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. தாக்குதலுக்கு முன்னதாக, அடையாளம் தெரியாத நபர்கள் அந்தப் பகுதியில் இருந்த ஒரு சிசிடிவி கேமராவை அடித்து உடைத்துள்ளனர் என்பதும் தெரியவந்தது.

போலீசார் விசாரணை:

இதைத்தொடர்ந்து அலுவலக உதவியாளர் செந்தில் கொடுத்த புகாரின் பேரில், காரைக்குடி வடக்கு காவல் ஆய்வாளர் ராமச்சந்திரன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். அப்பகுதியில் உள்ள மற்ற சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி, காங்கிரஸ் நிர்வாகிகள் சண்முகதாஸ், குமரேசன் உள்ளிட்டோர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டனர்.

ADVERTISEMENT
தாக்குதலுக்கான பின்னணி ?

சமீபத்தில் திமுக – காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தையின் போது இரு கட்சியினரிடையே கருத்து வேறுபாடுகள் நிலவிய நிலையில் ப.சிதம்பரத்தின் தலையீட்டிற்குப் பிறகே கூட்டணி உறுதியானது. இதனால் ஏற்பட்ட அதிருப்தி அல்லது உள்கட்சிப் பூசல் காரணமாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதா?

ஈரான் – இஸ்ரேன் அமெரிக்கா போரில் ஈரான் உச்சபட்சத் தலைவருக்கு எதிராக கார்த்தி சிதம்பரம் தெரிவித்த கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பெரும் எதிர்ப்பைச் சந்தித்தன. காரைக்குடியில் அவருக்கு எதிராகப் போஸ்டர்களும் ஒட்டப்பட்டிருந்தன. அந்தத் தரப்பினர் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாமா? என்ற இரண்டு கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் வரும் 2026 சட்டமன்றத் தேர்தல் தேதி அடுத்த ஓரிரு வாரங்களில் அறிவிக்கப்பட உள்ள சூழலில் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களின் அலுவலகம் குறிவைக்கப்பட்டிருப்பது காரைக்குடியில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share