மாணவர்கள் மற்றும் பொது மக்களிடையே வாசிப்பை அதிகரிக்கும் நோக்கில் ஆண்டுதோறும் தலைநகர் சென்னை உள்ளிட்ட மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் புத்தக கண்காட்சிகள் நடத்தப்படுகிறது. அந்த வகையில் கோவையில் இந்த ஆண்டு ஜூலை 18-ந் தேதி புத்தக கண்காட்சி தொடங்க உள்ளது. Coimbatore Book Fair
கோவை மாவட்ட நிர்வாகம், பள்ளி கல்வித்துறை, கொடிசியா இணைந்து நடத்தும் கோயம்புத்தூர் புத்தக திருவிழா -2025 இந்த ஆண்டு கொடிசியா வளாகத்தில் நடைபெற உள்ளது. இதற்கான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று ஜூலை 9-ந் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்தது. இதில் புத்தக திருவிழா தலைவர் ராஜேஷ், மாவட்ட வருவாய் அதிகாரி (பொறுப்பு) அபிராமி, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) சங்கேத் பல்வந்த்வாகே, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) நிறைமதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு தலைமை தாங்கி பேசிய மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கூறுகையில், ” கோவையில் புத்தக கண்காட்சி வரும் ஜூலை 18ம் தேதி தொடங்கி 27ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் 250 அரங்கங்களில் லட்சக்கணக்கான தலைப்புகளில் புத்தகங்கள் விற்பனைக்கு வர உள்ளன. மாநிலத்தில் பல பகுதிகளில் இருந்து வரும் பல்வேறு பதிப்பாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
புத்தக கண்காட்சி நடைபெறும் நாட்களில் இலக்கிய ஆளுமைகள் கலந்து கொள்ளும் கலை இலக்கிய நிகழ்வுகள், பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, விழிப்புணர்வு நாடகங்கள், கருத்தரங்கம் உள்ளிட்ட பல நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதில் மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் புத்தக ஆர்வலர்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோன்” என்றார்.
கடந்த ஆண்டு கோவையில் மிகச்சிறப்பாக நடந்த புத்தக திருவிழாவில் சுமார் 74,000-க்கும் மேற்பட்ட மக்கள் பார்வையிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வாசிப்பு பிரியர்களே ரெடியா.. கோவையில் புத்தக கண்காட்சி ஜூலை 18-ல் தொடக்கம்
Published On:
| By Minnambalam Desk

இதையும் படிங்க!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel