தமிழகத்தில் இன்று (நவம்பர் 12) 3 அமைச்சர்களின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாடு முழுவதும் மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்கள், விமான நிலையங்கள், பள்ளி, கல்லூரிகள், திரைக்கலைஞர்களின் வீடுகள், பத்திரிகை அலுவலகங்கள் உள்ளிட்ட பல இடங்களுக்கு தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில் இன்று தமிழக டிஜிபி அலுவலகத்திற்கு வந்த இமெயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவின் வீட்டிற்கு வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அமைச்சர் சேகர் பாபுவின் இல்லத்தில் போலீசார் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு நிபுணர்கள் சோதனை நடத்தினர். சேதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிய வந்தது.
இதேபோல் திருச்சியில் உள்ள நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு வீடு, அலுவலகம் மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வீடு மற்றும் அலுவலத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் இமெயில் வந்தது.
இதைத்தொடர்ந்து திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் காமினிக்கு தகவல் அளிக்கப்பட்டது. திருச்சி தில்லை நகர் பகுதியில் உள்ள கே.என்.நேரு வீடு மற்றும் சாஸ்திரி நகர் பகுதியில் உள்ள அலுவலகத்தில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு நிபுணர்கள் சோதனை நடத்தினர்.
தென்னூர் அண்ணா நகரில் உள்ள அமைச்சர் அன்பில் மகேஷ் வீடு மற்றும் சத்திரம் பகுதியில் உள்ள திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்திலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது.
மேலும் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கலை அறிவியல் கல்லூரிக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் அங்கும் தீவிர சோதனை நடைபெற்றது.
பாடகி சின்மயி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தால் அவரது வீட்டிலும் சோதனை நடைபெற்றது. சோதனையில் மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் நேற்று (நவம்பர் 11) பேசிய சென்னை காவல் ஆணையர் அருண் “கடந்த 7 மாதங்களில் சென்னையில் 342 மிரட்டல்கள் வந்துள்ளன. இந்த மிரட்டல்கள் டார்க் வெப்' மற்றும்விபிஎன்’ வழியே விடுக்கப்படுகின்றன.இதுபோன்ற மிரட்டல்களில் பெரும்பாலும் வெளிநாடுகளிலிருந்து வருவதுபோல் தெரியவில்லை. இங்கிருந்து யாரோ செய்வதாகக் கருதுகிறோம். மிரட்டும் முறை, பயன்படுத்தும் வார்த்தை உள்ளிட்டவற்றை வைத்து பார்க்கும்போது ஒன்று அல்லது 2 பேர் மட்டுமே இதன் பின்னணியில் உள்ளனர். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்” என தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று தமிழக அமைச்சர்கள் 3 பேர் தொடர்புடைய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
